விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைத்து பூஜை செய்த அதே இடங்களில்தான் நிகழாண்டும் சிலை வைத்து பூஜை செய்ய வேண்டும். ஊர்வலங்கள் அனுமதிக்கப்பட்ட பாதைகள் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஊர்வலத்தின்போது காலம் தவறாமை கடைப்பிடிக்க வேண்டும். மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பின் காவல்துறை அனுமதி பெற்ற பின்னரே, அந்த இடத்தில் சிலை வைக்க வேண்டும்.
மசூதிகளின் அருகில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யும் இடங்களில், தொழுகை நேரத்தின் போது ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் பதற்றமான இடத்தில் சட்டம், ஒழுங்கு பாதிப்பு எழாவண்ணம், கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், களிமண் சிலைகள் மட்டுமே பயன்படுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
விநாயகர் சிலை கரைக்கும் கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குதுறை, பள்ளிகொண்டான் அணை, மண்டைக்காடு, வெட்டுமடை, சின்னவிளை, மிடாலம், குழித்துறை ஆறு, திற்பரப்பு அருவி, தேங்காய்ப்பட்டினம் கடல் ஆகிய இடங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி அமைப்புகள் மூலம் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் அமைதியாக நடந்ததை போல நிகழாண்டும் அமைதியாக நடத்த அனைத்து அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்அபிநவ், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதா பானு, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, வட்டாட்சியர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com