மீனவர்கள் பிரச்னையைத் தீர்ப்பதில் தமிழக அரசு மீது முழு நம்பிக்கை: கோட்டாறு ஆயர் நசரேன்சூசை

குமரி மாவட்ட மீனவர்களின் பிரச்னையைத் தீர்ப்பதில் தமிழக அரசின் மீது முழு நம்பிக்கை உள்ளது என்றார் கோட்டாறு மறை மாவட்ட ஆயர்  நசரேன்சூசை.

குமரி மாவட்ட மீனவர்களின் பிரச்னையைத் தீர்ப்பதில் தமிழக அரசின் மீது முழு நம்பிக்கை உள்ளது என்றார் கோட்டாறு மறை மாவட்ட ஆயர்  நசரேன்சூசை.
குமரி மாவட்டம், தூத்தூரில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி , செவ்வாய்க்கிழமை பங்கேற்ற மீனவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
கடந்த 2 வாரங்களாக குமரி மாவட்ட மீனவர்கள் சந்தித்து வரும் மிகப்பெரிய துயரத்தைத் தீர்க்க அரசு முயற்சிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஆண்டுதோறும் மீனவ மக்களுக்கு வெவ்வேறு விதமாக துயர் வந்துகொண்டேதான் உள்ளது. அதில் பலர் மறைந்துபோகிறார்கள். ஆண்டுதோறும் நாங்கள் இழந்துகொண்டிருக்கிறோம். நிவாரணம் கொடுப்பதுடன் மறந்துவிடுகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என முதல்வருக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 
தமிழகத்தின் கடைகோடியில் இருப்பதால், நம்மை கண்டுகொள்ளவில்லையோ என சாமானிய மக்கள் கேட்கிறார்கள். அரசு இயந்திரம் வெளிநாடுகளைப் போல செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் பேரிடர் ஏற்படவில்லையா? அங்கு அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? அதை நாம் அறிந்து செயல்பட வேண்டும். எச்சரிக்கை தரப்படாமல் இறந்தவர்களுக்காக நாங்கள் அழுகிறோம். காணாமல் போகின்றவர்களை உடனடியாக தேடவேண்டும், மீட்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை.  கடந்த மாதம் 30 ஆம் தேதி காலை இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. 
1 ஆம் தேதி மாலை வரை  ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இழந்தவர்களை காப்பாற்றியிருக்கலாம் என்பதுதான் அவர்களது ஆதங்கம்.
அதேபோல, மீனவர்களுக்கான இழப்பீடு கேரள மாநிலத்தைப் போல அளிக்கப்படும் என்பதற்கான உறுதியை அரசு அளித்துள்ளது. ரூ. 20 லட்சம் என கணக்கிடாமல், மக்களின் இழப்புக்கு என்ன கொடுத்தால் ஈடாகும் என யோசிக்க வேண்டும்.
காணாமல் போனவர்களை 7 ஆண்டுகள் வரை இறந்தவர்களாக கருதமுடியாது என இந்தப் பேரிடரில் கூறுவது சரியல்ல. வரும் 31  ஆம் தேதிக்குள் மீனவர்கள் வராமல் இருந்தால், இறந்ததாகக் கருதி இழப்பீடு வழங்க வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். 
கேரள அரசு இதில் நமக்கு வழிகாட்டியாக உள்ளது. வள்ளங்கள், படகு உள்ளிட்டவற்றுக்கான இழப்பீடு தரவேண்டும். நாங்கள் அனைத்து ஆட்சியாளர்களிடம் கேட்பது, கன்னியாகுமரி, குளச்சல், தேங்காய்பட்டினத்தில் ஹெலிகாப்டர்  தளம் அமைக்க வேண்டும். தூத்தூரில் உள்ளவர்கள் 400 கடல்மைல் செல்பவர்கள்.
20 மீட்டர் நீளத்துக்கு அதிகமான விசைப்படகுகளை பதிவு செய்யமாட்டார்கள் என்கிறார்கள். 400 கடல்மைல் செல்ல அதிக நீளமான படகு அவசியம். எனவே, நீளமான படகுகளை பதிவு செய்ய வேண்டும். கடலில் இருக்கும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க மானிய விலையில் சக்தி வாய்ந்த வயர்லெஸ் கருவியை அரசு வழங்க வேண்டும். இதை மாவட்ட ஆட்சியரிடமும் கூறினோம். 
இதை சட்டத்தால் அல்லாமல் கரிசனையாக செய்ய வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படாலாம் என மக்கள் பயப்படுகிறார்கள். எனவே, அவர்கள் அச்சம் நீங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மீனவர்களுக்கு நல்லது செய்யும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது  என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com