நிவாரணம் அறிவிப்பு: வாழை, ரப்பர் விவசாயிகள் ஏமாற்றம்

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புயலால் இம்மாவட்டத்தில் 319.81 ஹெக்டேரில் நெற்பயிர்களும், 97.98 ஹெக்டேரில் 16,633 தென்னைகளும், 1926.02 ஹெக்டேரில் வாழைகளும், 1907.38 ஹெக்டேரில் ரப்பர் மரங்களும், 190.88 ஹெக்டேரில் மரவள்ளிக் கிழங்கு செடிகளும், கிராம்பு, முந்திரி, மிளகு உள்ளிட்ட இதரப் பயிர்கள் 198.205 ஹெக்டேரிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் தரப்பிலோ மாவட்டத்தில் 40 லட்சம் வாழைகளும், 20 லட்சம் ரப்பர் மரங்களும் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாழைக்கு ஹெக்டேருக்கு ரூ. 63,500, ரப்பருக்கு ஹெக்டேருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
வாழை பயிர்கள் 33 சதவீதத்துக்கும் அதிகமாக சேதமாகியிருந்தால் இடுபொருள் மானியமாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 13,500 வழங்கப்படும். மேலும், மீண்டும் சாதாரண முறையில் வாழை சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ. 35 ஆயிரமும், திசு வளர்ப்பு முறையில் சாகுபடி செய்ய ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். இதன் மூலம் வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 48,500 முதல் 63,500 வரை கிடைக்கும்.
இதேபோன்று 33 சதவீதத்துக்கு அதிகமாக பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை மானியம் ரூ. 18 ஆயிரமும், ஊடு பயிராக வாழை மற்றும் அன்னாசி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ. 50ஆயிரமும், ரப்பர் தோட்டங்களில் தேனீ வளர்க்கும் வகையில் ரூ. 32 ஆயிரத்துக்கு 20 தேனீ கூடுகளுடன் கூடிய தேனீ குடும்பங்கள் என மொத்தம் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னோடி விவசாயி பி. ஹென்றி கூறியது:
வாழை விவசாயிகள் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். வாழைக்கான குத்தகை கரம், வாழைக் கன்றுகளுக்கான விலை, நடவுச் செலவு, உரச் செலவு உள்ளிட்டவைகளுக்காக நேந்திரன், செவ்வாழை உள்ளிட்ட வாழைகளுக்கு, வாழை ஒன்றுக்கு ரூ. 225 முதல் ரூ. 350 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.
விவசாயிகள் பல வகைகளில் கடன் பெற்று வாழைகளை நடவு செய்துள்ள நிலையில், 33 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் எனக் கூறி சொற்பமான தொகையை அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. சேதமடைந்த வாழைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் பருவம் அடிப்படையில் மொத்த செலவையும், உழைப்பையும் உள்ளடக்கிய நிவாரணத்தொகையை வழங்க வேண்டும். மேலும் தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், விவசாயிகளின் அனைத்து வகையான வங்கிக் கடன்களையம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் அவர்.
முன்னோடி ரப்பர் விவசாயியும், குமரி மாவட்ட சிறு ரப்பர் விவசாயிகள் சங்க நிர்வாகியுமான கிருஷ்ணன் நம்பூதிரி கூறியது:
புயலால் இம்மாவட்டத்தில் சுமார் 20 லட்சம் ரப்பர் மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது மாநில அரசு அறிவித்துள்ள ஹெக்டேருக்கு ரூ. 1 லட்சம் என்ற நிவாரணம், குழப்பங்கள் நிறைந்ததாக உள்ளது.
ரப்பர் மரங்கள் நடப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகே பால் கொடுக்கும். இந்நிலையில் ஊடுபயிர் மானியம், தேன் பெட்டிகள் வைப்பதற்கு மானியம் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமானதல்ல. எனவே, தற்போது ரப்பர் தோட்டங்களில் சாய்ந்துள்ள மரங்களின் எண்ணிக்கை, அந்த மரங்களின் வயது ஆகியவற்றை கணக்கில் கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதில் ரப்பர் வாரியத்தினரின் உதவியை தமிழக அரசு நாட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com