பிரதமர் மோடி குமரி வருகை: தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டம் கடந்த நவ. 30ஆம் தேதி ஒக்கி புயல் தாக்கியதில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில் குமரிக்கு டிச. 19இல் வருகைதரும் பிரதமர் மோடி, புயலால் பாதிக்கப்பட்ட

கன்னியாகுமரி மாவட்டம் கடந்த நவ. 30ஆம் தேதி ஒக்கி புயல் தாக்கியதில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில் குமரிக்கு டிச. 19இல் வருகைதரும் பிரதமர் மோடி, புயலால் பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்தை தேசிய பேரிடரில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள், விவசாயிகள் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒக்கி புயல் கடந்த 30ஆம் தேதி தாக்கியதில், குமரி மாவட்டம் இதுவரை கண்டிராத பேரிழப்பை சந்தித்துள்ளது. கடந்த 1915 ஆம் ஆண்டுக்கு பின்னர் குமரி கடல் பகுதியில் 102 ஆண்டுகளுக்கு பிறகு பெருத்த சேதத்தை இந்தப் புயல் ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகி விட்டதால் அவர்களை தேடும் பணியில் கடலோரக் காவல் படையினரும், கப்பல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
புயல் தாக்கியதில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. 18 நாள்கள் ஆன நிலையிலும் பேச்சிப்பாறை மற்றும் மலையோரக் கிராமங்கள் இன்னும் இருளில் மூழ்கிய நிலையிலேயே உள்ளது.
மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழை, தென்னை, ரப்பர் மரங்கள், நெற்பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதே போல் குமரி மாவட்ட மலைப் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் எஸ்டேட்டுகள், அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான ரப்பர்கள் என பல கோடி மதிப்பில் வேளாண் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ராஜாக்கமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தும்பு தொழிற்சாலை, உப்பளங்கள் என பலதரப்பட்ட சிறு தொழில்களும் நசிந்துள்ளன. இப்புயல் குமரி மாவட்ட விவசாயத்தையும், அதன் உப தொழில்களையும் புரட்டிப் போட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 44 மீனவக் கிராமங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். புயல் அறிவிப்புக்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 345 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் கடற்கரை கிராமங்களில் இன்னும் சோகமே நிலவுகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்துக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர்கள் நிர்மலாசீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வந்து மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் சேதமடைந்த வேளாண் பயிர்களையும் பார்வையிட்டு சென்றனர்.
வாழ்க்கையையும் , வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் குமரி மக்களுக்கு ஆறுதல் தர வேண்டுமென்றால் குமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் பாதிப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும் என்ற நிலையில் டிச. 19இல் குமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர்.
இதுகுறித்து குமரி பாசனத்துறை தலைவர் வின்ஸ்ஆன்றோ கூறியது: குமரி மாவட்டத்தில் ஏராளமான விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பலர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களுக்கு இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும். உயிரிழந்த அனைவருக்குமே பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதை குமரிக்கு வருகை தரும் பிரதமரிடம் வலியுறுத்துவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com