சேவை குறைபாடு: காயமடைந்த பயணிக்கு ரூ.12 ஆயிரம் வழங்க ரயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

ரயிலில் இருந்து இறங்கும்போது  கீழே விழுந்து காயமடைந்த பயணிக்கு ரூ. 12 ஆயிரம்  இழப்பீடு வழங்க ரயில்வேக்கு, நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ரயிலில் இருந்து இறங்கும்போது  கீழே விழுந்து காயமடைந்த பயணிக்கு ரூ. 12 ஆயிரம்  இழப்பீடு வழங்க ரயில்வேக்கு, நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி சேரமங்கலம் கோட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன்(68).  பழைய தையல் இயந்திரங்களை பழுது நீக்கும் பணி செய்து வருகிறார்.  இவர் தனது தொழில் விஷயமாக அடிக்கடி திருவனந்தபுரத்துக்குச் சென்று வருவாராம்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி  இரணியல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரூ விரைவு  ரயிலில் திருவனந்தபுரம் செல்ல நடந்து சென்றபோது, ரயில் தண்டவாளத்தில் உள்ள கருங்கல் சல்லியில் கால் சறுக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாம்.
முதலுதவிக்குப் பின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினாராம். இதற்கிடையில் அவர் கையில் இருந்த பையும், அதில் இருந்த ரூ. 21 ஆயிரம் பணமும்  காணாமல் போனதாம். மேலும் கீழே விழுந்ததில் இடது கண் பார்வை, இடது காது கேட்காத நிலையும், இடது கையும் செயல்படாத நிலைக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டதாம்.
தொடர் சிகிச்சை எடுத்தும் அவரால் வேலை செய்து, வாழ்வாதாரத்தை காக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.இதனால் பாதிக்கபட்ட செல்லப்பன், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் தாமஸிடம் புகார் அளித்தார்.    தாமஸ், செல்லப்பனுக்காக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து வாதாடினார்.
 வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் நீதிபதி நாராயணசாமி, உறுப்பினர் சங்கர் ஆகியோர் ரயில்வே நிர்வாகத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட செல்லப்பனுக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுக்கு ரூ. 3988- ம், மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக  ரூ. 3 ஆயிரமும் ஒரு மாத காலத்துக்குள் வழங்க ரயில்வேக்கு உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com