ஜூலை 1 முதல் நாகர்கோவில் நகராட்சியில் சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ. 200 அபராதம்: நகராட்சி ஆணையர்

நாகர்கோவிலில் பொதுஇடங்கள், தெருக்களில் குப்பைகளை கொட்டினால் ரூ. 200 அபராதம் வசூலிக்கப்படும் என்றார் நகராட்சி ஆணையர் சரவணகுமார்.

நாகர்கோவிலில் பொதுஇடங்கள், தெருக்களில் குப்பைகளை கொட்டினால் ரூ. 200 அபராதம் வசூலிக்கப்படும் என்றார் நகராட்சி ஆணையர் சரவணகுமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நாகர்கோவில் நகராட்சி பகுதிக்குள்பட்ட பொதுஇடங்கள் மற்றும் தனியார் இடங்களில்,  குப்பைகளை கொட்டினாலோ, கடை மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து கழிவுகளை பொதுஇடங்களில் கொட்டினாலோ ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்.
கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக அதற்குரிய பெட்டிகளில் தரம் பிரித்து கொடுக்காமல் இருந்தால், தனிநபர் வீடுகளுக்கு ரூ. 100-ம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ. 1000மும், மொத்த கழிவு உற்பத்தியாளர்களுக்கு ரூ. 2 ஆயிரமும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டட கழிவுகளை பிரித்துக் கொடுக்காமல் இருந்தால் ரூ. 5 ஆயிரமும், தோட்டம் மற்றும் மரக் கிளை கழிவுகளை பிரித்து வழங்காமல் இருந்தால் ரூ. 200-ம், சமுதாயக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகளுக்கு (பொதுகுப்பை தொட்டி) வெளியே கொட்டினால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்.
கழிவுகளை எரித்தால், தனிநபர்களின் இடத்திற்குள் ரூ. 200, தனிநபர்கள் பொது இடங்களில் எரித்தால் ரூ. 500, நிறுவனங்களுக்கு ரூ. 1000, மீன், கோழி, இறைச்சிக் கழிவுகளை தனியாக இருப்பு வைத்து பிரித்து வைக்காமலிருப்பதற்கு ரூ. 1000, கழிவுகள் சேகரிக்கும் கூடையோ, பெட்டியோ வைக்காமல் விற்பனை செய்பவர், நடமாடும் விற்பனையாளர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்.
வியாபாரம் செய்பவர் நடமாடும் விற்பனையாளர் கழிவுகளை தனியாக பிரித்து தராமலிருந்தால் ரூ. 200, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யாமலிருந்தால், சுத்தம் செய்வதற்கான வைப்புத் தொகையை பிடித்தம் செய்து கொள்வதுடன் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இந்த விதிமுறைகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com