பேச்சிப்பாறை அணை அருகே புலியின் உடல் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை  அணை அருகே இறந்து கிடந்த பெண் புலியின் உடலை வனத் துறையினர் வியாழக்கிழமை மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை  அணை அருகே இறந்து கிடந்த பெண் புலியின் உடலை வனத் துறையினர் வியாழக்கிழமை மீட்டனர்.
பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான சீரோ பாயின்ட் தொடலிக்காடு பகுதியில் பெண் புலி ஒன்று இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. களியல் வனச்சரக அலுவலர்கள் இறந்து கிடந்த புலியைப் பார்வையிட்டு, மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன், மருத்துவக் குழுவினருடன் சென்று பார்வையிட்டார். பின்னர், மருத்துவக் குழுவினர் புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கூறியதாவது: குமரி மாவட்ட காடுகளில் சிறுத்தைகளே அதிகமாக உள்ளன. அபூர்வமாக இப்புலி குமரி காட்டுக்குள் வந்துள்ளது. முள்ளம்பன்றியுடன் மோதலில் ஈடுபட்டு அதை அடித்து உண்டபோது, பன்றியின் முள்கள் வயிற்றுக்குள் குத்தி புலி உயிரிழந்ததா அல்லது வேறு காரணங்களால் இறந்ததா என்பது குறித்து மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பின்னர் தெரியவரும் என்றார்.
குமரி காடுகளில் புலி: கன்னியாகுமரி வனக்கோட்டமானது, களக்காடு- முண்டன்துறை புலிகள் சரணாலயத்துக்கு அருகே அமைந்துள்ளபோதும், குமரி வனக் கோட்டத்தில் புலிகள் நடமாட்டம் இல்லையென்று வனத் துறை கூறி வந்தது. மேலும், கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட வனத் துறையின் கணக்கெடுப்பிலும் புலிகள் குறித்த புள்ளிவிவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
தற்போது புலி ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குமரி வனக் கோட்டப் பகுதியில் புலிகள் இருப்பதை உறுதிசெய்துள்ளது.
மேலும், மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட சீரோபாயின்ட், வலிய ஏலா, தொடலிக்காடு ஆகிய பகுதிகளை ஒட்டிய பகுதியிலேயே புலி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றியாறு, மைலாறு உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் அப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதாகவும், புலியை நேரில் பார்த்ததாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com