3 ஆண்டுகளாக தண்ணீர் செல்லாத திற்பரப்பு இடதுகரைக் கால்வாய்: விவசாயிகள் பாதிப்பு

குமரி மாவட்டம் திற்பரப்பு இடது மற்றும் வலது கரைக் கால்வாய்களில் கடந்த 3 ஆண்டுகளில் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் திற்பரப்பு இடது மற்றும் வலது கரைக் கால்வாய்களில் கடந்த 3 ஆண்டுகளில் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோதையாற்றில் திற்பரப்பு அருவி அருகே தடுப்பணை கட்டப்பட்டு,  இதன் இடது புறம் இடது கரைக் கால்வாயும், வலது புறம் வலது கரைக் கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளன. இடது கரைக் கால்வாய் 8.3 கி.மீ. நீளம் கொண்டது. இக்கால்வாய் பாடகசேரி,  அம்பாங்காலை,  சாத்திரவிளை வழியாக திருவட்டாறு அருகே சாரூர் குளத்தில் நிறைவடைகிறது. இதன் பாசனப்பரப்பளவு 500 ஏக்கர்.
வலது கரைக் கால்வாய்,  குழிச்சல்,  குஞ்சாலுவிளை,  நல்லூர் கோணம்,  குரூர்,  மக்காடு,  மஞ்சாலுமூடு வழியாக தாழக்குளத்தில் நிறைவடைகிறது.  இதன் நீளம் 12.5 கி.மீ.  பாசன பரப்பளவு 475 ஏக்கர்.
இக்கால்வாய்களில் அடிமடைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகள்,  மண்டிக்கிடக்கும் தூர்,  சேதமடைந்து கிடக்கும் மதகுகள் போன்ற காரணங்களால்,  கடந்த 3 ஆண்டுகளாக குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் தண்ணீர் செல்லவில்லையென விவசாயிகளும்,  பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இடது கரைக்கால்வாயில் தடுப்பணையிலிருந்து 3 கி.மீ. பகுதிக்குள் இருக்கும் அம்பாங்காலை என்ற இடத்துக்கு தண்ணீர் செல்வதற்கு முன்பே கால்வாயிலிருந்து முழுமையாக தண்ணீர் வெளியேறி விடுகிறது. இதனால் வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது போன்று நிலத்தடி நீரின்றி கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து சாத்திரவிளை பகுதியைச் சேர்ந்த  நிலத்தடி நீர் செறிவூட்டும் விவசாயிகள் சங்கத் தலைவர் அந்தோணி முத்து கூறியது:
திற்பரப்பு  இடது மற்றும் வலது கரைக்கால்வாய்களில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கால்வாய்களில் குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் செல்லவில்லை. இடது கரைக்கால்வாயில் அம்பாங்காலை பகுதி வரையே தண்ணீர் செல்கிறது. கால்வாய்களில் அடிமடை மற்றும் மதகுகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை முழுமையாக சீரமைத்தால் மட்டுமே கால்வாயின் கடைசிப்பகுதி வரை தண்ணீர் செல்லும். இதே நிலை நீடித்தால் கால்வாய்கள் தூர்ந்து போகும் அபாயம் ஏற்படும். எனவே  அடிமடைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகள்,  மண்டிக்கிடக்கும் தூர்,  சேதமடைந்து கிடக்கும் மதகுகள் ஆகியவற்றை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com