களியக்காவிளை அருகே குளத்தின் கரையோரம் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

களியக்காவிளை அருகே குளத்தின் கரையோரம் குப்பை கிடங்கு அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

களியக்காவிளை அருகே குளத்தின் கரையோரம் குப்பை கிடங்கு அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல் ஊராட்சியில் தேங்கும் குப்பைகளை கொட்ட இடவசதி இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் இந்த  ஊராட்சிக்கு உள்பட்ட படந்தாலுமூடு, சீரன்குறிச்சி குளத்தின் கரையில் தாற்காலிக கூரை  அமைக்கப்பட்டு, கடந்த இரு நாள்களாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஊராட்சியின் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் வகையில் குளத்தின் கரையோரம் புதைக்க வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டப்பட்டதாம். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் குளத்தின் கரையோரம் குப்பை கிடங்கு அமைப்பதால் இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்து, பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை முற்றுகையிட்டனர்.
  இதையடுத்து முன்சிறை  வட்டார வளர்ச்சி அலுவலர்  மற்றும் பணியாளர்கள் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அவர்களிடம், இங்கு குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதால் சாயன்விளை, மங்கணத்துவிளை, பூவன்கூடல், செக்காலவிளை, பணிக்கவிளை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியிலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இக் குளமும் பாழ்படும் நிலை உள்ளது என தெரிவித்தனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அனில்குமார் கூறியது:  இப்பகுதியில் மெதுகும்மல் ஊராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு, இங்கு மக்கும் குப்பைகளை குழிதோண்டி புதைத்து, அவற்றை 45 நாள்களுக்குப் பின் உரமாக மாற்றி விற்பனை செய்யவும், பாலித்தீன் பைகள்உள்ளிட்ட மக்காத குப்பைகளை தரம்பிரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
 பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதையடுத்து இது குறித்து துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.  இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com