களியக்காவிளை அருகே நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளர்கள் பேரணி

களியக்காவிளை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் சனிக்கிழமை

களியக்காவிளை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் சனிக்கிழமை காரக்கோணம் பகுதியிலிருந்து மத்தம்பாலை வரை பேரணியாகச் சென்று, பூட்டிக் கிடக்கும் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் மத்தம்பாலையில் தனியார் நிதி நிறுவனம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந் நிறுவனத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், கேரளத்தைச் சேர்ந்தவர்களும் பணத்தை முதலீடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 4 ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் இந் நிறுவனத்துக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இந் நிறுவனம் திறக்கப்படாததையடுத்து இங்கு பணம் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் கடந்த 7 ஆம் தேதி இந் நிறுவனம் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை மீட்கும் வகையில் நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டு, குமரி மாவட்ட பொருளாதார
குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளைக் கைது செய்து, முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி முதலீட்டாளர்கள் சனிக்கிழமை கேரள மாநிலப் பகுதியான காரக்கோணம் பகுதியிலிருந்து பேரணியாக வந்தனர். காரக்கோணத்தில் நடந்த இதன் தொடக்க நிகழ்ச்சியில் கேரள மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் கரமன ஜெயன், குந்நத்துகால் ஊராட்சித் தலைவர் அருண் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், நிதி நிறுவனத்துக்கு எதிராக அமைக்கப்பட்ட நடவடிக்கை குழுவின் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலர்கள் வினீஷ், சுனில்குமார், ஒருங்கிணைப்பாளர் கல்லறத்தல பாசி உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் மத்தம்பாலையில் உள்ள நிதி நிறுவனத்துக்கு பேரணியாக வந்தனர். அங்கு பூட்டிக் கிடக்கும் நிதி நிறுவனம் முன் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வரும் புதன்கிழமை
பாறசாலையில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேர முற்றுகைப் போராட்டத்துக்குப் பின் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதலீட்டாளர்களின் பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் காரணமாக பாறசாலை - பனச்சமூடு சாலையில் சென்ற வாகனங்கள் மத்தம்பாலை செல்லாமல் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
3 பேர் கைது
நிதிநிறுவன வாடிக்கையாளர்கள் 280 பேர் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். இது குறித்து துணைக்காவல் கண்காணிப்பாளர் பால்துரை நிதி நிறுவன இயக்குநர் நிர்மலன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவுசெய்து தேடி வந்தனர். இதில் நிதி நிறுவன இயக்குநர்கள் அணில்குமார்(52), இன்னொரு அணில்குமார்(43) ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com