குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
 நாட்டில் விவசாயம் செழித்து, வளம் பெருகுவதற்காக நிறை புத்தரிசி பூஜை கோயில்களில் நடத்தப்படுவது வழக்கம்.  சபரிமலை அய்யப்பன் கோயில்,  குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில்,  கன்னியாகுமரி பகவதியம்மன் உள்ளிட்ட கோயில்களில் இந்தப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
 பகவதியம்மன் கோயிலில் இதற்காக அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அதிகாலை 5 மணிக்கு அபிஷேகத்தைத் தொடர்ந்து நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. முன்னதாக, திருக்கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுக்கப்பட்டு,  கன்னியாகுமரி அறுவடை சாஸ்தா கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு பூஜை நடத்தப்பட்டு, நெற்கதிர்கள் மேள- தாளங்கள் முழங்க ஊர்வலமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு,  அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  அதன்பின், கோயில் மேலாளர் சிவராமச்சந்திரன் நெற்கதிர்களை பக்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கினார்.
இந்த நெற்கதிர்களை வீட்டின் முன் கட்டி வைத்தால் வாழ்வில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம்.  மேலும், இந்த நெற்கதிர்களை விதை நெல் மூட்டையில் வைத்திருந்து விதைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
இந்நிகழ்வில் கோயில் பூஜாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு ஆடி களப அபிஷேகம், 11 மணிக்கு தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் கோயில்களின் கண்காணிப்பாளர் ஜுவானந்தம், பகவதி அம்மன் கோயில் மேலாளர் சிவராமசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com