சுதந்திர தின விழாவில் ரூ.9.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்

நாகர்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  25 பயனாளிகளுக்கு  ரூ.9.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாகர்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  25 பயனாளிகளுக்கு  ரூ.9.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில்  72 ஆவது சுதந்திர தின விழா  நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் முன்னிலையில், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வண்ண பலூன்களை பறக்க விட்டார்.
தொடர்ந்து, முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில்,  3 முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.22 ஆயிரத்து 500-க்கான காசோலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு ரூ.1,68,680 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.4,068 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், மற்றொருக்கு  ரூ.5,018 மதிப்பில் இலவச தேய்ப்புப் பெட்டி, வேளாண்மைத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பில் மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருது, 2 விவசாயிகளுக்கு தலா  ரூ.5,000 வீதம் நெல் இயந்திர நடவுக்கான  மானியம், தோட்டக்கலைத்துறை சார்பில்  ஒருவருக்கு  பவர் டில்லர் வாங்குவதற்கு  ரூ.60 ஆயிரம், மாவட்ட தொழில்மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ. 4 , 74,050,   இருபது ஆண்டுகள் விபத்துகளின்றி பணிபுரிந்த  ஓட்டுநருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் 4 கிராம் தங்க நாணயம் என மொத்தம்  25 பயனாளிகளுக்கு  ரூ. 9.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும்,  அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய  50 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியர் ராஹுல் நாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதிக் தயாள்,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலர் என்.தாமரைபாரதி, வடக்கு ஒன்றிய செயலர் எம்.மதியழகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மு.வெங்கடேசன், காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், லீபுரம் ஊராட்சி அலுவலகத்தில் முன்னாள் தலைவர் அ.ஞானப்பிரகாசம் ஆகியோர் கொடியேற்றினர். 
தக்கலை: பத்மநாபபுரம் சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி  கே. அருணாச்சலம்  தேசியக்கொடி ஏற்றினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வேலுசாமி,  குற்றவியல் நீதிபதிகள் முத்துராமன், பாபு , ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில்  மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞர்  ராபர்ட்சிங், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில்  சிறந்த பணியாளர் விருது பெற்ற ராமசந்திரன் தேசியகொடியை ஏற்றிவைத்தார். நிகழ்ச்சிக்கு  நகராட்சி பொறியாளர் சீனிவாசராகவன் , நகர்மன்ற  மருத்துவ அலுவலர் லாரன்ஸ் விக்டர்ஜோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில்...
குமரி மாவட்ட பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
தக்கலை வின்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் வின்ஸ் எக்ஸ்லன்ஸ் சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான  நாஞ்சில் வின்சென்ட் தேசியக் கொடியை  ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பள்ளிச் செயலர் கிளாரிசா வின்சென்ட் , துணை முதல்வர் டெல்பின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில்  பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் எஸ்.எம்.எஸ் .ஹமீது தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  இதில், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கிருஷ்ணமணி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  தொடர்ந்து  பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. 
கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப்பள்ளியில் பள்ளித் தாளாளர் ஜாண்சாமுவேல் தேசியக் கொடியை ஏற்றினார்.  தலைமை ஆசிரியர்  கனகராஜ்,  வழக்குரைஞர் ராஜேந்திரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. 
கன்னியாகுமரி: ஈச்சன்விளை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்,  அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து நடனம், நாடகம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
 இதில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் எஸ்.கனகராஜ், முன்னாள் தலைவர் கணேச மார்த்தாண்டன், கிராம கல்விக்குழுத் தலைவர் பொன் பாக்கிய மகிபா, பால்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியை வாணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் எஸ்.செல்வகுமார் நன்றி கூறினார். 
குலசேகரம்: ஆற்றூர் என்விகேஎஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, பள்ளி முதல்வர் டி. பிரசோப் மாதவன் தலைமை வகித்து தேசியக் கொடியை  ஏற்றினார்.  துணை முதல்வர்கள் ஆஷா, அனிதா உள்ளிட்டோபங்கேற்றனர்.

களியக்காவிளை, வாறுதட்டு பள்ளியில்...
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. 
தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், வென்றோருக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் எஸ். ரஞ்சனி பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் பி. ஞானதாஸ், எஸ்.கே. லேகா, ஏ. மகேஸ்வரி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர், கிராம கல்விக் குழுத் தலைவர் சி. சுரேஷ்குமார், துணைத் தலைவர் கே. ரதி, அன்னையர் குழுத் தலைவர் செய்யதலி பாத்திமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாறுதட்டு மார் மத்தேயு காவுகாட் நினைவு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமையாசிரியர் சத்தியதாஸ் தலைமை வகித்தார். பள்ளி தல நிர்வாகி ஜோஸ் ஒற்றலாங்கல் முன்னிலை வகித்தார். புதுக்கடை ஒய்எஸ்மென் கிளப் பட்டயத் தலைவர் அருள்தாஸ் தேசியக்கொடியை ஏற்றினார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ரீஸ்மாவுக்கு ஊக்கத் தொகை  வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிளப் செயலர் நாகராஜன், பொருளாளர் லட்சுமணன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் விஜயகுமார், கிராம கல்விக்குழுத் தலைவர் சிவகுமார், கிளப் நிர்வாகிகள் மகிமைராஜ், தேவதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com