செண்பகவல்லி அணை உரிமை மீட்புக் குழு: விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வலியுறுத்தி, அணை உரிமை மீட்புக் குழு அமைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
Updated on
1 min read

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வலியுறுத்தி, அணை உரிமை மீட்புக் குழு அமைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
செண்பகவல்லி தடுப்பணையைச் சீரமைத்து செயல்படுத்த தமிழக, கேரள அரசுகளை வலியுறுத்தும் வகையில் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழக உழவர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் க.பாண்டியன் தலைமை வகித்தார். அ.கருணாநிதி, ஞானராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானம்: திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  மக்களுக்குப் பாசன நீரும், குடிநீரும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசின் வனத் துறையினர் முற்றிலும் இடித்து சேதப்படுத்திவிட்டனர். இதன் காரணமாக  3 மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். செண்பகவல்லி அணையை சீரமைக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், 8 வாரத்திற்குள் சீரமைத்து தரும்படி சென்னை உயர்நீதிமன்றம் 20.7.2006இல் உத்தரவிட்டது. கேரள அரசு  அந்த உத்தரவை செயல்படுத்த இன்றளவும் மறுத்து வருகிறது.
மேலும், 300 ஆண்டுகளுக்கு முன்பு செண்பகவல்லி அணையைக் கட்டியதற்கான ஆதாரம் இல்லையென்று கேரள அரசு கூறிவரும் நிலையில், உடனடியாக தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், சிவகிரி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அ.மு.பழனிச்சாமி, விவசாய சங்கத் தலைவர் ரத்தினவேல், உள்ளாறு விவசாய சங்கத் தலைவர்  பொன்.முத்தையாபாண்டியன், ராயகிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பிச்சாண்டி, திருமலாபுரம் விவசாயிகள் சங்கத் தலைவர் கோ.மாடசாமி, தென்மலை விவசாயிகள் சங்கத் தலைவர் காளிமுத்து, ராசிங்கப்பேரி பாசன சங்கத் தலைவர் பூமிநாதன், கீழகரிசல்குளம் விவசாயிகள் சங்கத் தலைவர் ரவி, முத்துப்பாண்டியன், இசக்கி, ஆடும்பெருமாள், மகளிர் ஆயம் மு.துரைச்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.
பின்னர், பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய வட்டங்களில் பாசன நீராகவும், குடிநீராகவும் இருந்த  செண்பகவல்லி அணை சேதமடைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அணையைச் சீரமைத்து செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் பேச்சு நடத்த வேண்டும். கேரள அரசு ஏற்கெனவே இருந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மதித்து செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வேண்டும். இதற்காக போராட்டக் குழு அமைத்து அறவழியில் தொடர்ந்து மக்கள் திரள் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com