செங்கோட்டையில்  விநாயகர் சிலை பிரதிஷ்டையில் மோதல்:  10-க்கும் மேற்பட்டோர் காயம், வாகனங்கள் சேதம்; போலீஸ் குவிப்பு

செங்கோட்டையில்  விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு ஊர்வலமாக கொண்டு

செங்கோட்டையில்  விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு ஊர்வலமாக கொண்டு சென்றபோது ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கார், இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால்  ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.  ஓம்காளி  விநாயகர் கமிட்டியின் சார்பில் முதல் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக  சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும்  பல்வேறு பகுதிகள் வழியாக  ஊர்வலமாக எடுத்து வந்தனர். செங்கோட்டை மேலூரில் உள்ள கீழ பள்ளிவாசல் வழியாக சிலையை கொண்டு வந்தபோது,  அந்தப் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும்  சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், செங்கோட்டை வட்டாட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் அமைதியாக ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டது. 
பின்னர் ஊர்வலம் புறப்பட்டபோது இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது  மண், கற்களை கொண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஊர்வலம் சென்றவர்களும்  சாலைகளில் கிடந்த கற்களை எடுத்து எதிர்தரப்பினர் மீது வீசியுள்ளனர். காவல்துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டது. 
இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் அப்பகுதியில்  உள்ள சுமார் 4-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 10-க்கும் மேற்பட்ட கார்கள்,  3-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சேதமடைந்தன. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் விரட்டினர்.  தொடர்ந்து இரு தரப்பினரும் குவிந்துள்ளதால், பதற்றம் நிலவுகிறது. இதனால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சராட்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com