திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: எம்.எல்.ஏ. தலைமையில் வியாபாரிகள் மறியல்

திருச்செந்தூரில் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. அனிதா

திருச்செந்தூரில் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மற்றும் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் தெ.தியாகராஜன், வட்டாட்சியர் அழகர், துணை வட்டாட்சியர்கள் கண்ணன், கோமதிசங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) நாகராஜன், சுகாதார ஆய்வாளர் கு.பூவையா உள்ளிட்டோர் சன்னதி தெரு முன்பகுதியிலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தொடங்கினர்.
பேருந்து நிலைய பகுதியில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் சிவசண்முகநாதன் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
எம்.எல்.ஏ. திடீர் மறியல்: இதற்கிடையே சன்னதித் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையிலான திமுகவினர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ரெ.காமராசு மற்றும் வியாபாரிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது எம்.எல்.ஏ. கூறுகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றினால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றார். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com