தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மனு

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மதிமுகவினர் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மதிமுகவினர் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, மதிமுகவினர் ஏராளமானோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடைகளுடன் சென்று குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மதிமுக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் விவரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மானாவாரி பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகிப்போய் விட்டன. வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள கால்நடைகள், பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருகிய பயிர்களுடன் விவசாயிகள் மனு: ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள குமரெட்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், நபார்டு உழவர் மன்றத் தலைவர் திருமால் தலைமையில் கருகிய பயிர்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
பசுவந்தனை உள்வட்டத்துக்குள்பட்ட குமரெட்டியாபுரம் பகுதியில் ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு போன்ற மானாவாரி பயிர்கள் மழையில்லாமல் கருகிப்போய் விட்டன. எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல, எப்போதும்வென்றான் பகுதி விவசாயிகள் ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சிக்கு பயிர்களைப் பறிகொடுத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com