பணமில்லா பரிவர்த்தனையை கையாள வேண்டும்: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனையை அனைவரும் கையாள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனையை அனைவரும் கையாள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் புதுவாழ்வு திட்டம் ஆகியவை சார்பில் மாவட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனையை செயல்படுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்பை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது:
தூத்துக்குடி மாவட்ட அளவில் பணமில்லா பரிவர்த்தனை முறையை செயல்படுத்துவதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பாக ஈ கவர்ன்ஸ் முறையில் காகித உபயோகத்தை குறைக்கும் விதமாக காகிதமற்ற சான்றுகளை அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியது.  குறித்த காலத்தில் போலிகளற்ற வெளிப்படைத்தன்மை உள்ள சான்றுகள் வழங்குவதே அதன் நோக்கமாக இருந்தது.
தற்போது, பண உபயோகத்தை குறைத்து முறையான பணபரிவர்த்தனை செய்து வங்கிகள் மூலமாக பணபரிவர்த்தனை செய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக பணமில்லா பரிவர்த்தனை திகழ்கிறது.  இதுவரை டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு மற்றும் நெட்பேங்கிங் மூலமாக அதிக அளவிலான தொகைக்கான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது, சில்லரை வணிகத்திலும் பயன்படுத்தும் வகையில் குறைந்த அளவிலான பண பரிவர்த்தனைகள் செய்யும் வகையில் செல்லிடப்பேசியில் உள்ள செயலின் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத்தரப்பு மக்களும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் நிலையை அடைவதற்கு தேவையான வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வங்கியும் இதற்காகவே தனித்தனியாக செயலியை வழங்குகின்றன. இணையதள வசதி இல்லாத செல்லிடப்பேசியிலும் பண பரிவர்த்தனை செய்யும் வகையில் அதற்கான செயலியும் வந்துள்ளது.  எனவே அனைத்து பொது மக்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை முறையை கையாள வேண்டும் என்றார் அவர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, மகளிர்திட்ட அலுவலர் இந்துபாலா, புதுவாழ்வு திட்ட மேலாளர் கர்ணன், முன்னோடி வங்கியின் பொது மேலாளர் பிராபகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com