கோவில்பட்டியில் எண்ணெய் கிடங்குக்கு சீல்

கோவில்பட்டியில் உள்ள தனியார் எண்ணெய் கிடங்குக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.

கோவில்பட்டியில் உள்ள தனியார் எண்ணெய் கிடங்குக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்துக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமையில், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளான மாரிச்சாமி, பொன்னுராஜ், டைட்டஸ், பாலசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோவில்பட்டியையடுத்த சாலைப்புதூர் மீனாட்சி நகரில் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த ஆசாரு (34) என்பவர் நடத்தி வரும் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் கிடங்கில் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெயை பகுப்பாய்வுக்கு எடுத்தனர்.
பின்னர் அங்கிருந்த ஊழியர் திருச்சூரைச் சேர்ந்த அப்துல்கரீன் மகன் சானிடிடம் (30) விசாரணை நடத்தினர். இதையடுத்து அங்கிருந்த சுமார் 45 லிட்டர் எடை கொண்ட எண்ணெய் இருந்த அந்த கிடங்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
இங்கிருந்து பாமாயில் கலந்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய் ஆகியவற்றை டின்களில் அடைத்து, சுமை ஆட்டோவில் ஏற்றி, தரமற்ற எண்ணெய் விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, எண்ணெய் மாதிரி எடுக்கப்பட்டு, சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com