ரேஷன் கடை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவில்பட்டியில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களின் காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை சனிக்கிழமை தொடங்கினர்.

கோவில்பட்டியில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களின் காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை சனிக்கிழமை தொடங்கினர்.
கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டின் கீழ் கோவில்பட்டி மற்றும் இளம்புவனம்,குமாரகிரி, சுரைக்காய்ப்பட்டி, குளத்துள்வாய்ப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 17 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இக் கடைகளில் 14 விற்பனையாளர்கள் மற்றும் 8 எடையாளர்கள் என மொத்தம் 22 பேர் பணியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், விற்பனையாளர்களாக இருந்த அருணாசலபெருமாள் மற்றும் சங்கரநாராயணன் ஆகிய இருவரும் பதவி உயர்வு பெற்று, உதவியாளராக 1-9-14 முதல் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இருவருக்கும் உதவியாளர் பணிக்கான ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும். வேளாண் உற்பத்தியாளர்கள் கட்டுப்பாட்டில் கோவில்பட்டி மற்றும் எட்டயபுரத்தில் உள்ள ஜின்னிங் பேக்டரி ஃபிட்டர் பதவிக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். விற்பனையாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கி,அந்த பணிக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள், எடையாளர்கள் அனைவரும் சனிக்கிழமை சங்க அலுவலகத்திற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் வழக்கம் போல் கையெழுத்துவிட்டு நியாயவிலைக் கடைக்குச் செல்லாமல், சங்க அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக் குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கோரிக்கைகள் குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், அதுவரை தாங்கள் வழக்கம்போல பணியில் ஈடுபடவும் அறிவுரை வழங்கினர். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத போராட்டக் குழுவினர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கூறியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டக் குழுவினரிடம் கேட்ட போது, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நியாயவிலைக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமையும் செல்ல மாட்டோம். இது தொடர் போராட்டமாக நடைபெறும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com