கருகிய பயிர்கள், காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது கருகிய பயிர்களுடனும், காலிக்குடங்களுடனும் சென்று பெண்கள் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது கருகிய பயிர்களுடனும், காலிக்குடங்களுடனும் சென்று பெண்கள் மனு அளித்தனர்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக்ததில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது ஆட்சியர் ம. ரவிகுமார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, விளாத்திகுளம் அருகேயுள்ள ஜமீன்கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன் கருகிய பயிர்களுடன் திரண்டனர்.
 பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ஜமீன்கரிசல்குளம் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உளுந்து, பாசிப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் கருகிய நிலையில் காணப்படுகின்றன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு  வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 காலிக்குடங்களுடன் மனு: தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்துவரும் பெண்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு ஆட்சியரிடம் அளித்த மனு: கோரம்பள்ளத்தில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் 60 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். எங்களது பகுதிக்கு கோரம்பள்ளம் கண்மாயில் கிணறுகள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குளத்தில் தண்ணீரின்றி காணப்படுகிறது. எனவே, அரசு ஊழியர் குடியிருப்புக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி விசாரணை தேவை: தூத்துக்குடி தி பெந்தெகொஸ்தே விசுவாசிகள் நலச்சங்கத்தினர் வழக்குரைஞர் அதிசயகுமார் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி மில்லர்புரம் தி பெந்தேகொஸ்தே சபையின் தலைமை போதகராக இருந்த கனகராஜ் கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிப்காட் போலீஸார் கனகராஜின் உடலில் காயங்கள் இருந்ததால் கொலை வழக்காக பதிவு செய்தனர். இருப்பினும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே,  மதபோதகர் கனகராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் அந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகக் கட்டணம் வசூல்: மதிமுக மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன் தலைமையில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு: தூத்துக்குடியில் உள்ள பல திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகும்போது அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  திரையரங்குகளில் பொதுமக்கள் குடிக்க சுகாதாரமான குடிநீர் வைப்பதில்லை.  திரையரங்க கழிவறைகளும் சுத்தம் செய்யப்படாமல் நோய்களை உற்பத்தி செய்யுமிடமாக மாறிவருகிறது.
 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில திரையரங்குகளில் அதிகக் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதிகக் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பொதுமக்களை திரட்டி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com