கோவில்பட்டி, ஆறுமுகனேரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி, மாணவர்கள் மற்றும் சமூக வலைத்தள நண்பர்கள் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன் தர்னாப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி, மாணவர்கள் மற்றும் சமூக வலைத்தள நண்பர்கள் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன் தர்னாப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு தடையை உடனே நீக்க வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பயணியர் விடுதி முன் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில், 25-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான இளைஞர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் தர்னா போராட்டமாக உருவெடுத்தது. இதையடுத்து, பயணியர் விடுதி முன் திரண்ட இளைஞர்கள், பெண்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி கோஷமிட்டனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கழுகுமலையில் ஆர்ப்பாட்டம்: கழுகுமலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி புதன்கிழமை கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் தமிழ்ச்செல்வன்(45), கயத்தாறையடுத்த திருமங்கலக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிநின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்துவந்த டி.எஸ்.பி. முருகவேல், திருமங்கலக்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவர் சீனிப்பாண்டியன் ஆகியோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மாலை 5.30  மணிக்கு செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிய அவர், இரவு 7.30 மணிக்கு கீழே இறங்கினார்.
ஆறுமுகனேரியில்...
ஆறுமுகனேரி:ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி, ஆறுமுகனேரி பிரதான பஜார் நான்கு சாலை சந்திப்பில் இளைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.           சீமான் தலைமையில் தினீஷ், சிவராம், மகேஷ் கண்ணன், தங்கபெருமாள், செல்வ ஆனந்த், பேயன்விளை பாண்டியன் உள்ளிட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com