3 ஆவது நாளாக ஆர்ப்பரித்த தூத்துக்குடி மாணவர்கள்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடியில் 3ஆவது நாளாக வியாழக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடியில் 3ஆவது நாளாக வியாழக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் ஒரே இடத்தில் திரண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர், மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி ஏராளமான கல்லூரி மாணவர்கள் திரண்டு தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். இரண்டாவது நாளாக புதன்கிழமை பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் விடிய விடிய தங்களது போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில், 3ஆவது நாளாக ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவர், மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டம் நடைபெறும் மைதானத்துக்கு பேரணியாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல, வஉசி அரசுப் பொறியியல் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, காமராஜ் கல்லூரி, ஏபிசி மகாலட்சுமி கல்லூரி என அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகளும் ஒரே இடத்தில் திரண்டதால் மைதானம் நிரம்பி காணப்பட்டது.
மாணவர், மாணவிகளின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏராளமான பள்ளி மாணவர்களுக்கும் போராட்டம் நடைபெறும் மைதானத்துக்குச் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர், மாணவிகள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும்; பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர். போராட்டத்தின்போது எந்தவித பிரச்னைகளும் ஏற்படாத வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண் மயக்கம்: போராட்டத்தில் கலந்துகொண்ட முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாலதி (26) என்ற பெண் திடீரென மயக்கம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அவர் முத்தையாபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் எனத் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com