ஜல்லிக்கட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 45 ஆயிரம் கடைகள் அடைப்பு: 4ஆவது நாளாக மாணவர், மாணவிகள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 45 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் குறைந்த அளவே இயங்கின. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 4 ஆவது நாளாக நடைபெற்ற தொடர் போராட்டத்தில் மாணவ, மாணவிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
4ஆவது நாளாக போராட்டம்: தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் கடந்த 4 நாள்களாக மாணவர், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட அதிகளவு மாணவர், மாணவிகள் திரண்டிருந்தனர். ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கடைடைப்பு: இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இதில், அனைத்து வணிக அமைப்புகளும் கலந்துகொண்டன. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள ஏறத்தாழ 14 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. வி.இ. சாலையில் உள்ள வஉசி மார்க்கெட் மற்றும் காய்கனி மார்க்கெட் பகுதியில் மட்டும் சில கடைகள் திறந்திருந்தன.
டபிள்யூஜிசி சாலை, விஇ சாலை, மார்க்கெட் பகுதிகள், சிதம்பரநகர், அண்ணாநகர், திரேஸ்புரம், தாளமுத்துநகர், மட்டக்கடை, சண்முகபுரம், கால்டுவெல் காலனி, பிரையன்ட் நகர், 3 ஆவது மைல், மில்லர்புரம், டேவிஸ்புரம், முத்தையாபுரம், ஸ்பிக்நகர் ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
பேருந்துகள் இயக்கம்: இதனிடையே, அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகளில் ஒருசில பேருந்துகளை தவிர மற்றவை வழக்கம்போல இயக்கப்பட்டன. மினி பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வேன், வாடகை கார் போன்றவை பெருமளவில் இயக்கப்படவில்லை.
பள்ளிகளுக்கு விடுமுறை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என ஆட்சியர் ம. ரவிகுமார் வியாழக்கிழமை இரவு அறிவித்திருந்தார். இருப்பினும், தகவல் சரியாக கிடைக்காததால் மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோவில்பட்டியில்...
கோவில்பட்டியில் மாணவர்கள், சமூக வலைதள நண்பர்கள் பயணியர் விடுதி முன்பு  புதன்கிழமை தர்னா போராட்டத்தை தொடங்கினர். 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் நீடித்தது. இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
சாலை மறியல்:  கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. அவர்களை டி.எஸ்.பி. முருகவேல், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் ஆகியோர் தடுத்து, பயணியர் விடுதியில் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட அறிவுறுத்தினர்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி வட்டார லேண்ட் மீடியேட்டர்ஸ் அசோஸியேஷன் அமைப்பினர், பயணியர் விடுதிக்கு ஊர்வலமாகச் சென்று தர்னாவில் பங்கேற்றனர்.
கடையடைப்பு:  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி, கழுகுமலை, கடம்பூர், கயத்தாறு ஆகிய பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது. மருந்து மற்றும் பூ கடைகளை தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. கோவில்பட்டி தினசரி சந்தை வெறிச்சோடியது; திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர். தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதுபோல, கயத்தாறில் ஐ.டி.ஐ. நிறுவனத்தில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர், மாணவிகள் ஒருமணி நேரம் அமைதிப் போராட்டம் நடத்தினர். கழுகுமலையில் சி.ஆர். காலனி, சார்-பதிவாளர் அலுவலகங்கள் முன் தொடர்ந்து தர்னா நடைபெற்று வருகிறது. கடலையூரில் பொதுமக்கள், அனைத்து வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சார்பில் பேருந்து நிலையம் அருகே தர்னா நடைபெற்றது.
சாலைப் பணியாளர்கள்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, கோவில்பட்டி பயணியர் விடுதி வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர், வட்டத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் திரளாகப் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூரில்...
திருச்செந்தூரில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பினர், திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கத்தினர், நகர யாதவ வியாபாரிகள் சங்கத்தினர், திருக்கோயில் கலையரங்க சிறு வியாபாரிகள் சங்கத்தினர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாக வியாபாரிகள், காந்தி தினசரி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் என திருச்செந்தூரில் உள்ள அனைத்து சங்க வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இதனால் திருச்செந்தூர் நகர வீதிகள் வெறிச்சோடின.
3ஆவது நாளாக... திருச்செந்தூர் வஉசி திடலில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3ஆவது நாளாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு வியாபாரிகள் அனைவரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூரில்...
ஆறுமுகனேரியில் வியாபாரிகள் ஐக்கிய சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம் கடையடைப்பில் பங்கேற்றன.இதனால், நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கடைவீதி வெறிச்சோடியது.ஆத்தூரில் வியாபாரிகள் சங்கம் சார்பிலும், காயல்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, இரு நகரிலும் கடைகள் திறக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை. ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை.
உடன்குடியில்...
உடன்குடி: உடன்குடி வியாபாரிகள் முன்னேற்றம் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று உடன்குடி நகர் பகுதி, மெஞ்ஞானபுரம், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்களும் ஓடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com