கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை எடுக்க தடை விதிக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி அருகேயுள்ள பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை லாரிகளில் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி அருகேயுள்ள பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை லாரிகளில் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் ம. ரவிகுமார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 இந்நிலையில், தூத்துக்குடி அருகேயுள்ள  கீழ தட்டப்பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் தலைமையில் கீழதட்டப்பாறை, மேலதட்டப்பாறை, சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.  பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: தங்களது பகுதியில் ஏறத்தாழ 2500 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றோம். நிகழாண்டில் போதுமான மழை இல்லாததால் மக்கள் தேவை மட்டுமன்றி கால்நடைகளின் தேவைகளுக்காகவும் எங்களது பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரையே பயன்படுத்தி வருகிறோம்.
  இந்நிலையில் கல்குவாரி பள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை சிலர் லாரிகள் மூலமாக எடுத்துச்சென்று தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக வரும் நாள்களில் எங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
 தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும் என போலீஸாரிடமும், அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் தண்ணீரை விற்பனை செய்பவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே கல்குவாரிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதற்கு உடனடியாக தடை விதித்து எங்களை பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் மனு: மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் விஜி தலைமையில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: திருநங்கைகளான நாங்கள் தூத்துக்குடி சிலோன் காலனி, ஹவுசிங்போர்டு, தாளமுத்து நகர் பகுதிகளில் வசித்து வருகிறோம். நாங்கள் வீடு கட்டி வாழ்ந்திட ஏதுவாக அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் விண்ணப்பித்தும் வருகிறோம். ஆனால் இதுவரை வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை.
 விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் எல்லாம் வீட்டுமனைப்பட்டா திருநங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல,  தூத்துக்குடி மாவட்டத்திலும் திருநங்கைகளுக்கு அவர்கள் வாழ்ந்துவரும் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளிலேயே இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்:ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: தூத்துக்குடி மாநகரில் கடந்த சிலநாள்களாக கடுமையான அளவில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 எனவே, தூத்துக்குடி மாநகராட்சிக்கு தண்ணீர் தரும் தாமிரவருணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், தூத்துக்குடி மாநகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்திட துரித நடவடிக்கை எடுக்கும் வகையில் குடிநீர் மேலாண்மை குழு ஏற்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மனு:தூத்துக்குடி நலிவடைந்த ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் அய்யாத்துரை தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு: ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தாய் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியே ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது பணிகள் அனைத்தும் மொத்தமாக ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் எங்களைப் போன்ற சிறிய ஒப்பந்ததாரர்களுக்கு எந்தவித பணியும் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com