ஸ்ரீமூலக்கரையில் ஆதிதிராவிட மக்களுடன் தேநீர் அருந்தும் மனமகிழ் நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு

மனித நேய வார விழாவை முன்னிட்டு ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுடன் தேநீர் அருந்தும் மனமகிழ் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மனித நேய வார விழாவை முன்னிட்டு ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுடன் தேநீர் அருந்தும் மனமகிழ் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் மனித நேய வார விழா ஜன.24 முதல் ஜன.30 வரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீமூலக்கரை இந்து ஆதிதிராவிட தொடக்கப் பள்ளியில், பொதுமக்களுடன் அரசு அலுவலர்கள் மற்றும் ஆதிதிராவிட மாணவ, மாணவியரும், அவர்களின் பெற்றோரும் தேநீர் அருந்தும் மனமகிழ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமை வகித்துப் பேசியதாவது:
ஆதிதிராவிட மக்கள் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் அவர்களுடன் சமத்துவமாய், சகோதரத்துவமாய் இணைந்து வாழ்ந்திடும் பொருட்டு இதுபோன்ற தேநீர் அருந்தும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீமூலக்கரை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக பகுதிநேர ரேஷன் கடை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்திட தாமிரவருணி நதியின் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துடன் இப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதர தண்ணீர்த் தேவையை நிவர்த்தி செய்திட அடிபம்புகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதிய பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இங்குள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கான ஷேர் ஆட்டோ, டிரக்கர் போன்ற வாகனங்களை அரசு மானியம் மூலமாக வாங்கித் தரவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை,  மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com