மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் விரைந்து கடன் வழங்கவேண்டும்: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கியாளர்கள் விரைந்து கடன் வழங்கவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கியாளர்கள் விரைந்து கடன் வழங்கவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது. மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் பேசியது: தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ. 137 கோடி வங்கி நேரடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது வரை 3,295 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 101.77 கோடி நிதி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது, மீதமிள்ள 35 கோடி ரூபாய் நிதியாண்டு முடிவதற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் கடன் இணைப்பு வழங்கியதில் 0.0006 சதவீதத்திற்கும் குறைவாகவே வாராக்கடன் உள்ளது. அவற்றையும் அதிகாரிகள் உதவியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதன் தகுதி அடிப்படையில் வங்கி கடனுதவி வழங்க வங்கியாளர்கள் முன்வர வேண்டும். தற்போதைக்கு பல்வேறு வங்கிகளில் மாவட்டத்தில் 1,171 குழுக்களுக்கு 36.35 கோடி கடன் வழங்க விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து விண்ணப்பங்களையும் வங்கியாளர்கள் உடனடியாக பரிசீலனை செய்து கடனுதவி வழங்கவேண்டும். மேலும் 30 ஊராட்சி அளவிலான மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்புகளுக்கு 13.66 கோடி ரூபாய் பெருங்கடன் வழங்கிடவும் தரமதிப்பீடு செய்து வங்கிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றையும் வங்கியாளர்கள் பரிசீலனை செய்து நிகழ் நிதியாண்டிற்குள் வழங்க வேண்டும்.
மகளிர் சுயஉதவிக் குழுவினர் வங்கிகள் தரும் கடனுதவிகளை பணத் தேவைகளுக்காக பயன்படுத்தாமல், தொழில் புரிவதற்கு முதலீடாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், நபார்டு வங்கி மாவட்ட அலுவலர் விஜயபாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் லட்சுமி, புதுவாழ்வு திட்ட மேலாளர் கர்ணன் மற்றும் அனைத்து முதன்மை வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், தொடர்புடைய கிளை மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com