ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்னா

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் ம. ரவிகுமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தரையில் அமர்ந்து போராட்டம்: தூத்துக்குடி அருகேயுள்ள புல்லாவழி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
இந்திய அணுசக்தி துறையின் கீழ்,  தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் இயங்கி வரும் சிர்கோனியம் தொழிற்சாலையில் உள்ளூர் பகுதி மக்களான புல்லாவழி பகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு நிரந்த பணி ஏதும் வழங்காமல் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி வழங்கப்பட்டது.
அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் பல தொழிலாளர்களை சிர்கோனியம் நிறுவனத்தினர் தற்போது பணிநீக்கம் செய்துள்ளனர்.  எனவே, பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு கேட்டு மீனவப் பெண்கள் மனு:   தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: தூத்துக்குடி கடற்கரை பகுதியில் உள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சுனாமி  மறுவாழ்வு  திட்டத்தின் மூலமாக  வீடுகள்  கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை எங்களைப் போன்ற வீடு இல்லாதவர்களுக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு சொந்த வீட்டுக்கு சென்று விட்டனர்.
தற்போது சுனாமி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் தங்களுக்கு சுனாமி வீடுகள் வழங்க வேண்டும். தங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சுனாமி வீடுகள் கட்டப்பட்டு பூட்டிய நிலையில் உள்ள வீடுகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பாற்று ஓடையில் ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், உப்பாற்று ஓடையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் தனியார் தொழில் நிறுவனங்கள் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றன.
தற்போது, உப்பாற்று ஓடையில் இருபுறமும் கரைகளை உடைத்து சிலர் ஆக்கிரமிப்பு சேய்து வருவதால் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக புகார்: பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலர் அரிச்சந்திரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில், வல்லநாடு பகுதிகளில் நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதால் அந்தப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, நிலத்தடி நீர் திருட்டை மாவட்ட ஆட்சியர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் ஷேக் அஷ்ரப் தலைமையில் அக்கட்சியினர் ஆட்சியரிடம் அளித்த மனுவில், பேட்மாநகரம் கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடங்கியது. ஆனால், இதுவரை அந்தப் பணிகள் முடிவடையாமல் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையீட்டு அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com