தூத்துக்குடியில் குடிநீர் வழங்கக் கோரி மறியல்

தூத்துக்குடியில் 20 நாள்களுக்கு மேலாக  குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் 20 நாள்களுக்கு மேலாக  குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 26 , 27 ஆவது வார்டு பகுதிகளில் கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அந்தப் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
 இந்நிலையில்,  ஜெய்லானி தெரு,  மீகா தெரு,  தெற்குபுதுத் தெரு  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலிக்குடங்களுடன் தூத்துக்குடி ஜாமியா பள்ளி வாசல் முன்பு டபுள்யூஜிசி சாலையில் திங்கள்கிழமை  மறியலில்  ஈடுபட்டனர்.
 திமுக பகுதிச் செயலர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  சிலர் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையெடுத்து,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகளும்,  தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸாரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.  அப்போது, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.

சாத்தான்குளம் அருகே...
சாத்தான்குளம் அருகே  ஆப்ரேட்டர் இல்லாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் குடிநீர் முறையாக வழங்கக் கோரி பெண்கள்  திங்கள்கிழமை  மறியலிலில்  ஈடுபட்டனர்.  மேலும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம்  அருகேயுள்ள தாமரைமொழி கிராம மக்களுக்கு அங்குள்ள  2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  தற்போது தாமரைமொழி  ஊராட்சிக்கு  குடிநீர்  ஆப்ரேட்டர் பணியிடம் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் ஒரு மாதமாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது. இதனால் இக்கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.  இதுகுறித்து ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதையடுத்து  தாமரைமொழி பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 100 பேர்  திங்கள்கிழமை  காலை நடுவக்குறிச்சி -பூவுடையார்புரம் சாலையில்  மறியலிலில்  ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சில பெண்கள்,  அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்  ஏறி நின்றும்  தர்னாவில்  ஈடுபட்டதால் பரபரப்பு எற்பட்டது.
தகவல்  அறிந்து தட்டார்மடம் போலீஸார்  அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதில்  குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்  என அவர்கள் உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com