ஏடிஎம் எண்ணைப் பெற்று திருச்செந்தூர் வியாபாரியிடம் ரூ.1.27 லட்சம் மோசடி: மேற்கு வங்கத்தினர் இருவர் கைது

திருச்செந்தூரைச் சேர்ந்த வியாபாரியிடம் செல்லிடப்பேசி மூலம் ஏடிஎம் எண்ணைப் பெற்று ரூ.1.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்செந்தூரைச் சேர்ந்த வியாபாரியிடம் செல்லிடப்பேசி மூலம் ஏடிஎம் எண்ணைப் பெற்று ரூ.1.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் ஜெபஸ்தியார் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். வியாபாரியான இவரிடம் கடந்த ஜனவரி  31ஆம் தேதி செல்லிடப்பேசியில் ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஒரு வங்கியின் பெயரைக் கூறி அந்த வங்கியின் மேலாளர் என அறிமுகம் செய்துகொண்டாராம்.
மேலும் பால்ராஜின் ஏடிஎம் அட்டை முடக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதை சரி செய்ய ஏடிஎம் அட்டையில் உள்ள 16 இலக்க எண்களைக் கேட்டுள்ளார். அந்த எண்ணை பால்ராஜ் தெரிவித்தாராம். சிறிது நேரத்தில் பால்ராஜின் செல்லிடப்பேசிக்கு வந்த ரகசிய குறியீட்டையும் அந்த நபர் கேட்க, அதையும் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
 இது நிகழ்ந்த மறுநாள் பால்ராஜின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 919 பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாக செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்ததாம். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பால்ராஜ், உடனே வங்கி மேலாளரை நேரில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். அப்போது வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என மேலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஷிடம் பால்ராஜ் புகார் தெரிவித்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் சாகுல் அமீது தலைமையில் தனிப்படை அமைத்து, சம்பந்தப்பட்ட நபரை விரைவில் கண்டுபிடிக்குமாறு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார். தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த மோசடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கு வங்கம் சென்ற தனிப்படை போலீஸார், கூக்ளி மாவட்டம் மோக்ரா பகுதியைச் சேர்ந்த கமாலுதீன் மகள் ஜாவீத் அக்தர் (19),லால் முகமது மகன் காதர் உசைன் (37) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com