தூத்துக்குடி புத்தகக் கண்காட்சியில் புதிய முயற்சி: அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடையாக புத்தகங்கள் சேகரிப்பு

தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு   புத்தகங்களை நன்கொடையாக வழங்குவோருக்கு வசதியாக புத்தக சேகரிப்புப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு   புத்தகங்களை நன்கொடையாக வழங்குவோருக்கு வசதியாக புத்தக சேகரிப்புப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் ஆதரவுடன் புத்தகக் கண்காட்சி - விற்பனை கடந்த 2ஆம் தேதி முதல் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது.
106 அரங்குகளில்  70 பதிப்பகங்களைச் சேர்ந்தோர் ஒரு லட்சம் தலைப்புகளில் பல லட்சம் புத்தகங்களை விற்பனைக்காக வைத்துள்ளனர். மாவட்டம் முழுவதிலுமிருந்து பள்ளி, கல்லூரி மாணவர் - மாணவிகள் ஏராளமானோர் தினமும் கண்காட்சியைப் பார்வையிட்டு புத்தகங்கள் வாங்கிச் செல்கின்றனர்.
தினமும் முற்பகல் 11 மணி முதல் மாணவர்- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், மாலை 6 முதல் இரவு 9 மணி வரை சிறந்த பேச்சாளர்கள் பங்கேற்கும் சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
முதல் நாளான அக். 2ஆம் தேதி ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும், 2ஆம் நாளில் ரூ. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 811-க்கும், 3ஆம் நாளில் ரூ. ஒரு லட்சத்து 72 ஆயிரத்துக்கும் புத்தங்கள் விற்பனை ஆகியதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய முயற்சியாக புத்தகக் கண்காட்சியை பார்வையிட வருவோரிடமிருந்து அரசுப் பள்ளிகள் மற்றும் விடுதி மாணவர்- மாணவிகள் பயனடையும் வகையில் புத்தகங்களை சேகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து புத்தக சேகரிப்புப் பெட்டி ஒன்றை அமைத்துள்ளது.
புத்தக நன்கொடை வழங்க விரும்புவோர் இப்பெட்டியில் புத்தகங்களைப் போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் என். வெங்கடேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் நாளில் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை அந்தப் பெட்டியில் போட்டு, சேகரிப்புப் பணியைத் தொடக்கிவைத்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியது: தூத்துக்குடியில் முதல் முறையாக நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அக். 11 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் புத்தகங்களை வாங்குவோர் அவற்றில் சிலவற்றை அரசுப் பள்ளி மாணவர்- மாணவிகள் பயன்பெறும் வகையில் நன்கொடையாக வழங்க முன்வந்தால் புத்தக சேகரிப்புப் பெட்டியில் போடலாம்.
சேகரமாகும் புத்தகங்கள் அனைத்தும், கண்காட்சி முடிந்த பிறகு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள்,  அரசு மாணவர்- மாணவிகள்  விடுதிகளுக்கு பிரிந்து வழங்கப்படும். இவை அவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com