டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மூ. வீரப்பன் (ஆட்சியர் பொறுப்பு) உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மூ. வீரப்பன் (ஆட்சியர் பொறுப்பு) உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் கொசு ஒழிப்பு பணிகள் முன்னேற்றம் மற்றும் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்த சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சிதுறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: மாவட்டத்தில் தற்போது, பருவ மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய உள்ளாட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்குதல் துறை அலுவலர்கள் நீர் நிலைகளிலிருந்து நீரேற்றும் மைங்களுக்கு செல்லும் குடிநீரை தேவையான அளவு குளோரினேசன் செய்து சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் தடுப்புக்கான, போதிய மாத்திரைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். போதுமான அளவு குளோரின் வாயு உருளைகள் மற்றும் பீளிச்சிங் பவுடர் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கட்டடங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் ஏடிஸ் கொசு புழுக்கள் உற்பத்தி இல்லை என உறுதிப்படுத்தும் வகையில் வியாழக்கிழமைதோறும் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான், விழிப்புணர்வு பேரணிகள் நடத்த வேண்டும். மாவட்டத்தில் கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி முற்றிலுமாக காய்ச்சல் ஏற்படாதவண்ணம் அனைத்துத் துறை அலுவலர்களும் பொதுமக்களுடன் இணைந்து உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com