கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியில் சாலை விரிவாக்கப் பணியை உடனே தொடங்க வேண்டும், விபத்துகளை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்பன

கோவில்பட்டியில் சாலை விரிவாக்கப் பணியை உடனே தொடங்க வேண்டும், விபத்துகளை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். 
கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலத்திலிருந்து ரயில்வே மேம்பாலம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ரூ. 7 கோடியில் நடைபெறவுள்ள சாலை விரிவாக்கப் பணியை காலதாமதமின்றி உடனே தொடங்க வேண்டும். கோவில்பட்டி புதுரோடு சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்னிருந்து மாதாகோவில் தெரு விலக்கு வரையுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை உடனடியாக தொடங்கி விபத்துகளை தடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் தலைமையில், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில், நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5 ஆவது தூண் நிறுவனர் சங்கரலிங்கம், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கப் பொதுச் செயலர் ராஜசேகரன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிறகு, போராட்டக் குழுவினர் கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி கோரிக்கை விரைவில் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் கூறியதை அடுத்து, போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com