தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 96.12 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம்: ஆணையர்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் பாதிப்பிலிருந்து தடுக்கும் வகையில், ரூ. 96.12 கோடியில் மழைநீர்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் பாதிப்பிலிருந்து தடுக்கும் வகையில், ரூ. 96.12 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு மழைவெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தன. இதைக் கருத்தில் கொண்டு  தமிழக அரசு தூத்துக்குடி  நகருக்குள்  வெள்ளம் புகாதவாறு இருக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டது. 
அதன்படி,  தனியார் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு மாநகரில் வடிகால் அமைக்க மொத்தம் 3 கட்டங்களாக  பணிகளை மேற்கொள்ள ரூ.937 கோடிக்கு திட்ட அறிக்கை தாக்கல் செய்தது.
இந்தத் திட்டத்தின் ஆய்வறிக்கையின் படி முதல்வர் உத்தரவின்பேரில்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை ரூ 96.12 கோடிக்கு நிர்வாக அனுமதி  வழங்கி கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. அதன்படி,  மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேற்குப் பக்கம் உள்ள காலாங்கரை, கழுகுபாதை மற்றும் கழுதைபாதை ஆகிய மூன்று ஓடைகளில் இருந்து வரும் வெள்ளநீரை வடக்குப் பக்கம் உள்ள பெரியபள்ளம் ஓடையின் வழியாக கடலில் வெளியேற்றப்பட பணி நடைபெற உள்ளது.
மேலும்,  மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிழக்குப் பக்கம் உள்ள காலாங்கரை கழுகுபாதை மற்றும் கழுதைபாதை ஆகிய  மூன்று ஓடைகளிலிருந்து வரும் வெள்ளநீரை சி.வ.குளத்தில் சேகரிப்பது என்றும்,  இதற்காக சி.வ.குளத்தை தூர்வாருதல், ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சி.வ.குளத்தில் சேகரமாகும் உபரி நீரை மீளவிட்டான் சாலையில் வடிகால் அமைத்து அதன் வழியாக பக்கிள் ஓடையில் கலக்க செய்யும் பணியும், செங்குளம் ஓடை வழியாக வரும் வெள்ளநீரை தேசிய நெடுஞ்சாலை வழியாக தெற்கு பக்கம் உள்ள உப்பாத்து ஓடையில் கலக்கச் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதவிர, முள்ளக்காடு ஓடையை அகலப்படுத்தி கட்டும் பணி ஆகியவற்றின் மூலம் மாநகரப் பகுதிக்குள் வெள்ளநீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால்கள் வாயிலாக பொது மற்றும் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நேரடியாக கடலில் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தத் திட்டப்பணிகளை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர துரித  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com