கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியில் வாகன சோதனை என்ற அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொள்ளும்  செயலைக் கண்டித்தும்,  காவல்துறையினர் மீது

கோவில்பட்டியில் வாகன சோதனை என்ற அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொள்ளும்  செயலைக் கண்டித்தும்,  காவல்துறையினர் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் தினமும் காலை, மதியம், மாலை என அனைத்து நேரங்களிலும் வாகன தணிக்கை செய்வதாகக் கூறி, சாலைகளில் செயல்பட்டு வரும் ஆட்டோ, சுமை ஆட்டோ, வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, பதிவுச் சான்று, காப்பீடு சான்று கேட்டும், சீட்-பெல்ட், தலைக்கவசம் அணிவது குறித்தும் வாகனங்களை வழிமறிக்கின்றனர். 
இதனால்  பணிக்குச் செல்ல முடியாமல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட்டுமின்றி, விபத்துகள் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தி, ஓட்டுநர்களை துன்புறுத்தி வருகின்றனராம். 
   தணிக்கையின் போது, அனைத்துச் சான்றுகள் மற்றும் சட்ட திட்டங்களை முழுமையாகப் பின்பற்றினாலும் ஏதேனும் ஒரு குற்றங்களை சொல்லி அபராதம் விதிப்பதோடு மட்டுமின்றி  ஓட்டுநர்களை மிரட்டுகின்றனராம். 
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, வியாழக்கிழமை அண்ணா  தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் தமிழரசன், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலர் ராஜசேகரன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்க மாவட்டச் செயலர் பொன்ராஜ், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் விஜயபாண்டியன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்வம், மறுமலர்ச்சி தொழிலாளர் கழகத்தைச் சேர்ந்த குழந்தைவேலு உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், வாகன ஓட்டுநர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
பின்னர், கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட நேர்முக உதவியாளர்,  மனுவை கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com