தூத்துக்குடியில் 15 நிமிடம் பெய்த மழை: மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் குளம்போல காட்சியளித்த விளையாட்டு மைதானம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. தூத்துக்குடியில் 15 நிமிடங்கள் மட்டுமே மழை பெய்த

தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. தூத்துக்குடியில் 15 நிமிடங்கள் மட்டுமே மழை பெய்த போதிலும்,  மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் குளம்போல தேங்கியுள்ளது.
தெற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதி கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது.  மேலும், காற்று 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கடந்த நான்கு நாள்களாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக,  தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம்,  விளாத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பகல் மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்தது.  இருப்பினும், செவ்வாய்க்கிழமை இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  ஆனால், மழை ஏதும் பெய்யவில்லை.
 மாவட்டத்தில் அதிகப்படியாக கோவில்பட்டியில் 9 மி.மீ.,  தூத்துக்குடியில் 8.60 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 7 மி.மீ.,  விளாத்திகுளத்தில் 6 மி. மீ.,  சூரங்குடியில் 5 மி.மீ., எட்டயபுரத்தில் 4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 46.20 மி. மீ. மழை பதிவாகியது.
தூத்துக்குடி மாநகரைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 15 நிமிடம் மட்டுமே மழை பெய்தது.  இதனால், தூத்துக்குடியில் ஆங்காங்கே சில இடங்களில் சாலையோரங்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, தென்பாகம் காவல் நிலையம்,  சிவந்தாகுளம் பிரதான சாலை, பழைய மாநகாரட்சி அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீர் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் வடிந்தது.
ஆனால், தருவை மைதானம் என அழைக்க்படும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைநீர் அதிகளவு தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது.  மழை நீருடன் அதே பகுதியில் செல்லும் கழிவுநீர் வடிகாலில் இருந்து வெளியேறிய நீரும் சேர்ந்து கொண்டதால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இதனால், மாவட்ட விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டோர் முகம் சுழித்தபடியும், முகத்தை துணியால் மூடிக்கொண்டும் சென்றனர்.  
 மேலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் வடிகாலை சரியாக பராமரிக்காததும் தண்ணீர் தேக்கத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   எனவே, இதுகுறித்து மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரிகளும், மாநகாரட்சி அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் தண்ணீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com