திருச்செந்தூரில் எம்எல்ஏ தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சென்னையில் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்செந்தூரில் எம்எல்ஏ

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சென்னையில் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்செந்தூரில் எம்எல்ஏ தலைமையில் மறியலில் ஈடுபட்ட 58 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சென்னை தலைமை செயலகம் முன்பு முற்றுகை, மறியலில் ஈடுபட்ட போது திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் திருச்செந்தூர் தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை பகலில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதில், திமுக மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் செ.வெற்றிவேல், மாநில மாணவரணி துணைச் செயலர் உமரி சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலர் ஏபிஆர் .ராமேஷ், நகரச் செயலர் மந்திரம், காயல்பட்டினம் நகர பொறுப்பாளர் முத்துமுகமது, ஆறுமுகனேரி நகரச் செயலர் ராஜசேகர், ஒன்றிய மகளிரணிச் செயலர் வேலம்மாள் மற்றும் 3 பெண்கள் உள்பட 58 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருப்புக் கொடியேந்தி ஊர்வலம்: திருச்செந்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட ஆலந்தலை மீனவ கிராம மக்கள் ஊர் நல கமிட்டி சார்பில் தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து வியாழக்கிழமை கருப்பு கொடியேந்தி ஊர்வலமாக சென்றனர்.
வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு: தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திருச்செந்தூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆல்பர்ட், செயலர் சங்கரகிருஷ்ணன் தலைமையில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இவர்கள் வெள்ளிக்கிழமையும் பணி புறக்கணிப்பை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆறுமுகனேரியில் கடையடைப்பு: தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்தும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் ஆறுமுகனேரியில் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது. இதில் சுமார் 350 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனாலும், ஆறுமுகனேரி வழியாக தூத்துக்குடிக்கு பேருந்துகள் இயக்கப்படாததாலும் பிரதான பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்ட காவல் துறை சார்பில் ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் வேலை நிறுத்தம் : ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அங்கு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து, புதன்கிழமையை தொடர்ந்து வியாழக்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திருச்செந்தூர் பகுதியில் உள்ள மீனவர் கிராமங்களான பழையகாயல், புன்னக்காயல், காயல்பட்டினம் கொம்புத்துறை, சிங்கித்துறை, வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர் , அமலிநகர், ஆலந்தலை, கல்லாமொழி, குலசேகரப்பட்டினம், மணப்பாடு வரையில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாததால், படகுகள் அனைத்தும் கரையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
மாற்று வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்: இந்த போராட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து திருச்செந்தூர்-தூத்துக்குடியிடையே பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி மார்க்கமாக மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்துநிலையத்தில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாக இயக்கப்பட்டன.
சாத்தான்குளம்: முக.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை மாலையில் மறியலில் ஈடுபட்ட ஒன்றிய திமுக செயலர் ஜோசப், நகரச் செயலர் இளங்கோ, ஒன்றிய அவைத் தலைவர் சௌந்திரபாண்டியன் உள்பட 27 பேரை, காவல் சார்பு ஆய்வாளர் ஆழ்வார் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து பெரியதாழையில் மீனவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com