திருச்செந்தூர் கோயில் கிரிப்பிரகாரத்தில் தற்காலிக மேற்கூரை அகற்றம்: பக்தர்கள் அவதி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிரிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்கூரை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிரிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்கூரை, கந்த சஷ்டி விழா முடிந்தவுடன் அகற்றப்பட்டதால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இக்கோயிலில் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி கிரிப்பிரகார மண்டபத்தின் மேற்கூரை வடக்குவாசல் அருகே உடைந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தையடுத்து, கிரிப்பிரகாரம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. கிரிப்பிரகாரத்தின் ஓரங்களில் இருந்த கடைகளும் அகற்றப்பட்டன.
அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அறநிலையத் துறை மற்றும் கடலோர பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின் ஒப்புதலின்படி புதிதாக கிரிப்பிரகாரம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டு நெருங்க உள்ள நிலையிலும் இதுவரையில் கிரிப்பிரகார மேற்கூரை அமைக்கப்படவில்லை.
இதற்கிடையில், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததன் பேரில், கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி நிறைவு பெற்ற கந்த சஷ்டி விழாவுக்கு முன்னதாக அவசர அவசரமாக தகரத்தாலான மேற்கூரை கிரிப்பிரகாரம் முழுவதும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கந்த சஷ்டி விழா 14-ஆம் தேதி நிறைவு பெற்றதையடுத்து, மேற்கூரையை அகற்றும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றது. இதனால் அதிக கூட்டத்தின்போது பக்தர்கள் வெயிலிலும் மழையிலும் ஒதுங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட தற்காலிக மேற்கூரையானது, வாடகை முறையில் சுமார் ரூ.8 லட்சம் செலவில்  அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இனி நிரந்தர கிரிப்பிரகார கட்டடம் கட்டும் வரையில், சுமார் ரூ.5 கோடி செலவில் இரும்புத்தகடுகளாலான மேற்கூரை அமைக்கப்பட உள்ளது என திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே பணிக்காக பல வகைகளில் பணத்தை செலவழிப்பதாக பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com