மானியத்தில் வேளாண் கருவிகள்: விவசாயிகளுக்கு அழைப்பு

 மானியத்திலான வேளாண் கருவிகளை வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மானியத்தில் வேளாண் கருவிகள்: விவசாயிகளுக்கு அழைப்பு

 மானியத்திலான வேளாண் கருவிகளை வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ், பல்வேறு வேளாண் இயந்திரங்களை வாங்க நடப்பாண்டில் ரூ 31 கோடியே 6 லட்சம் மானியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இத்திட்டம், வேளாண் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுத்தப்படுகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பவர் டில்லர், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், குழி தோண்டும் கருவி, டிராக்டர், விசை களையெடுக்கும் இயந்திரம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும்  இயந்திரம், தட்டை வெட்டும் கருவி, கைத்தெளிப்பான் மற்றும் விசைத் தெளிப்பான்கள் இதர வேளாண்மைக் கருவிகளும், இயந்திரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சிறு, குறு ஆதிதிராவிட பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% வரையும், இதர விவசாயிகளுக்கு 40% வரையும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தங்களின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து மானிய உதவியுடன் வாங்கி பயனடையலாம்.இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் அரியலூர், ஜயங்கொண்டம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விவரங்கள், வேளாண் பொறியியல் துறையின் முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

வேளாண்மைப் பொறியியல் துறையின் அனுமதிக் கடிதம் கிடைக்கப் பெற்றவுடன் தேர்வு செய்த கருவிகள், வேளாண் இயந்திரம் ஆகியவற்றிற்குரிய முழுத் தொகையையும், விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கேட்பு வரைவோலை மூலமாக வழங்க வேண்டும்.

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை விவசாயிகள் பெற்ற பின்னர், அதை வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள் உறுதி செய்து, அதற்குரிய முழு மானியத் தொகையையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவார்கள். விவசாயிகள் வேளாண் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க, இத்திட்டத்திற்கென அரியலூர் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ. 30.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மானிய விலையில் கருவிகள், இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக வேளாண் பொறியியல் துறையில் பதிவு செய்து, பயன்பெறுமாறு ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com