அனைத்து பயிர்களுக்கும்காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து: நீதிமன்ற உத்தரவுப்படி ஏரி, குளம், ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் பிரிமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க மாநிலத் தலைவர் அம்பேத்கர்வழியன்: மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். குறுவை நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பிச்சப்பிள்ளை: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன்:
விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள இலவச மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே சுண்டக்குடியில் தடுப்பணை கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வாரணவாசி ராஜேந்திரன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பேசினர். தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா விளக்கம் அளித்தார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com