மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்இ-சேவை மையங்கள் செயல்படுவது எப்போது?சி.சண்முகவேல்

பொதுமக்களின் அலைச்சலை குறைத்து அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்கள்


பொதுமக்களின் அலைச்சலை குறைத்து அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்கள் பெரும்பாலானவை திறக்கப்படாமல் பூட்டிக் கிடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வருவாய்த் துறைச் சான்றிதழ்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட விண்ணப்பம், போட்டித் தேர்வு, பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பதிவு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் என 40 வகையான சேவைகளை பொதுமக்கள் பெறும் வகையில், பெரும்பாலான அரசுத் துறைகள் இணைக்கப்பட்டு இ- சேவை மையங்கள் தொடங்கப்பட்டன.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரியலூர் மாவட்டத்தில் மின்னாளுமைத் திட்டத்தின் கீழ் முதலில் ஆட்சியரகத்திலும், அதைத் தொடர்ந்து
வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களுக்கும், கிராம ஊராட்சிப் பகுதிகள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் இ-சேவை மையங்கள் விரிவுப்படுத்தப்பட்டு இயங்கி வந்தன.
அலைச்சலைக் குறைக்க : பொதுமக்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையில், கிராமங்கள் தோறும் இ-சேவை மையங்களைத் தொடங்கத் திட்டமிட்ட மாநில அரசு, அதற்கான கட்டடங்களைக் கட்டி, மகளிர் சுய உதவிக்குழுவினருக்குப் பயிற்சியளித்து, கணினி மற்றும் இணையதள வசதியையும் பெற்றுத் தந்து, மையங்களை உருவாக்கின.
பயனற்ற நிலையில் இ-சேவை மையங்கள் : கிராமங்கள் தோறும் மக்கள் வசதிக்காக தொடங்கப்பட்டாலும், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கிராம சேவை மையங்கள் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டாலும் அவை பயனற்ற நிலையில் இருப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகுவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியிலுள்ள இ-சேவை மையம் பொதுமக்களின் துணி உலர்த்தும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாராமாகவும் விளங்குகிறது. இதுபோல, பள்ளக்காவேரி கிராமத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மையங்கள் இன்னும் திறக்கப்படாமலேயே உள்ளது.மாவட்டத்தில் இதுபோன்ற பல சேவை மையங்கள் இருந்தும் அவை திறக்கப்படாமல் அல்லது மக்கள் பயன்படாத நிலையிலேயே இருக்கின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி, கிராமங்களில் கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேக இணைய வசதியுடன் சேவைகளுடன் கூடிய மையங்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக நடத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com