அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டுஇளைஞர் எழுச்சி தின விழிப்புணர்வுப் பேரணி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூரில் இளைஞர் எழுச்சி தின விழிப்புணர்வுப் பேரணி


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூரில் இளைஞர் எழுச்சி தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியானது அண்ணா சிலையில் தொடங்கி பிரதான சாலை வழியாகச் சென்று பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் நா. சத்தியநாராயணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் எழுச்சி தின விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்துல் கலாமின் மேம்பாட்டு சிந்தனைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் பெ. பழனிசாமி தொடங்கி வைத்துப் பேசினார். பின்னர் அவர் திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
சுற்றுச்சூழல் துறைத்தலைவர் ஆ.அருள், இயற்பியல் துறை பேராசிரியர் ம.இராசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் வெ. கருணாகரன் வரவேற்றார். முடிவில் தமிழ்த்துறை பேராசிரியர் பெ. கலைச்செல்வன் நன்றி கூறினார். தொடர்ந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து அப்துல் கலாமின் சிந்தனைகளை பொதுமக்களிடையே நினைவு கூரும்வகையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியானது கல்லூரி வளாகத்தில் தொடங்கி ராஜாஜி நகர், செந்துறை சாலை, பெரிய கடைவீதி வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் :
அரியலூர் அருகேயுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சிறப்பு ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, கல்லூரி முதல்வர் பி.சுரேஷ்குமார் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்ட ரத்த வங்கியைச் சேர்ந்த மருத்துவர் இ. சுந்தர்ராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று 50 யூனிட் ரத்தத்தைச் சேகரித்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளை மாணவ, மாணவிகள் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com