பராமரிப்பில்லாத கங்கைகொண்ட சோழபுரம் பயணியர் மாளிகை

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கும் பயணியர் மாளிகையை புதுப்பிக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கும் பயணியர் மாளிகையை புதுப்பிக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் கி.பி.1023 ஆம் ஆண்டு ஜயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கி அங்கிருந்து ஆட்சியை நிர்வகித்தார். அங்கு அருள்மிகு பரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினார்.
எட்டு பக்கங்களோடு, நளினத்தோடு அமைக்கப்பட்ட விமானம், கிழக்கு நுழைவு வாயில் பெரிய நந்தி, பிரம்மாண்டமான மூலமூர்த்திகள், இருபுறம் கருங்கல்லான துவார பாலகர்கள், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வானசாஸ்திர முறைப்படி அழகாக செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள்.
60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரு கல்லில் வடிமைக்கப்பட்ட லிங்கம். இது தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம்.இங்குள்ள அம்மன் பெரியநாயகி, பெயருக்கு ஏற்றார் போல் பெரிய உருவத்தில் காட்சி தருகிறார். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர்கால கட்டட கலைக்கு மிகச்சிறந்த எடுத்து காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
இதனை உலக பாரம்பரிய சின்னமாக, யுனெஸ்கோ அறிவித்து பராமரித்து வருகிறது. இதனால் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கண்டு அதிசயிக்கின்றனர்.
இதனால் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கங்கைகொண்ட சோழபுரம் விளங்குகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவதால், அவர்கள் தங்கி கண்டுகளித்து செல்லும் வகையில் பயணியர் மாளிகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று, 2009ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.50 லட்சம் செலவில் கோயிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கும்பகோணம் சாலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலாப் பயணியர் மாளிகை கட்டப்பட்டு, 2010இல் திறக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகளுக்கான உணவகம், 5 தங்கும் விடுதிகள், 7 வாடகை கடைகள், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளது.
இந்த பயணியர் மாளிகை கட்டடம் தற்போது பயன்படுத்தாமலும், முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் வளாகத்தில் முள்புதர்கள் மண்டிக் கிடக்கிறது. பெரும்பாலான தங்கும் விடுதிகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடக்கின்றன.
இதற்கு பாதுகாவலர்கள் யாரும் நியமிக்கப்படாததால் எப்போதும் வாயில் கதவு திறந்தே கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் சுற்றுலாப் பயணியர் மாளிகை மாறிவருகிறது. கோயிலுக்கு அருகாமையில் பயணியர் மாளிகை அமைக்காமல் சற்று தொலைவில் அமைக்கப்பட்டதே காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு சேவை சங்க மாவட்டத் தலைவர் ம.ப.அண்ணாமலை கூறியது: தற்போது உள்ள சுற்றுலாப் பயணியர் மாளிகையில் அதிகப்படியான காலி இடங்கள் உள்ளது. இதில் கூடுதலாக குடியிருப்புகள் கட்டி பொதுமக்களுக்கு வாடகைக்கு விடும் பட்சத்தில், வளாகத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்த பலரும் முன்வருவர். இதனால் சிதலடைந்து போகும் சுற்றுலாப் பயணியர் மாளிகை பாதுகாக்கப்படும் என்றார்.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் கேட்ட போது, பராமரிப்பில்லாமல் கிடக்கும் சுற்றுலாப் பயணியர் மாளிகை கோயிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் தங்குவதற்கு யாரும் வருவதில்லை. இதனால் அங்கு கட்டப்பட்டுள்ள உணவகம், கடைகளில் வியாபாரம் இல்லாததால் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
கோயிலின் அருகில் இதுபோன்ற வசதிகளுடன் கட்டடம் கட்ட இடமிருந்தும் அனுமதியில்லை. ஏனெனில் கோயிலின் அருகில் கட்டடம் கட்டினால் பழைமை மாறிவிடும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டடம் கட்ட அனுமதி கேட்டு தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com