வறட்சியால் வாழைத்தார் வரத்து குறைவு: விலை இருமடங்கானது

வறட்சியால் கரூர் சந்தைக்கு வரும் வாழைத்தாரின் வரத்து பாதியாக குறைந்ததால் அதன் விலை இருமடங்கானது.

வறட்சியால் கரூர் சந்தைக்கு வரும் வாழைத்தாரின் வரத்து பாதியாக குறைந்ததால் அதன் விலை இருமடங்கானது.
கரூர் காமராஜர் தினசரி சந்தையில் வாழைக்காய் மண்டிகள் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டிகளுக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, காட்டுப்புத்தூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் குளித்தலை, புகழூர், வேலாயுதம்பாளையம், லாலாபேட்டை, மாயனூர், நெரூர், தளவாபாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிகளவு வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு அவை ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
 இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் கரூர் மாவட்டத்திலும் நீர்மட்டம் சுமார் 1,000 அடிக்கு கீழ் சென்றுவிட்டன. காவிரி மற்றும் அமராவதியில் தண்ணீர் இன்றி இரு ஆறுகளும் வறண்டு காணப்படுவதால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வாழை, நெற்பயிர் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது சந்தைக்கு வரும் வாழைத்தார் வரத்தும் பாதியாக குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதத்தை விட இப்போது வாழைத்தாரின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக கரூர் காமராஜர் சந்தையைச் சேர்ந்த வாழைக்காய் மண்டியின் முருகையன் கூறுகையில், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் கரூர் சந்தைக்கு வரும் வாழைத்தாரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
முன்பெல்லாம் நாளொன்று 14 லோடுகள் வரை வரும். ஆனால் நிகழாண்டில் வறட்சியால் ஆறு லோடுகள் வருவதே பெரிய விஷயமாக உள்ளது. சென்ற மாதத்தை விட இந்த மாதம் வாழைத்தாரின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதிலும் இந்த வாரம் சற்று விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் பூவன் தார் ரூ. 350-400 வரை ஏலம் போனது. இப்போது ரூ. 700 வரை போகிறது. ரஸ்தாளி கடந்த மாதம் ரூ. 375-க்கு போனது. தற்போது ரூ. 550-க்கும், ரூ. 300-க்கு ஏலம் போன கற்பூரவள்ளி தற்போது ரூ. 500-க்கும், ரூ. 260-க்கு விற்ற பச்சைலாடன் ரூ. 500-க்கும், ரூ. 150-க்கு விற்ற மொந்தன் தற்போது ரூ. 300-க்கும், ரூ. 6-க்கு விற்ற ஒரு செவ்வாழைப்பழம் தற்போது ரூ. 12-க்கும் ஏலம் போகிறது.
தற்போது பல்வேறு கோயில்களில் திருவிழா நடைபெற்று வருவதாலும் பழத்தின் விலை கடந்த மாதத்தை விட உயர்ந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com