வாய்க்கால்கள் தூர்வாராததால் 63,000 ஏக்கர் பாதிப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயி புகார்

கரூர் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் 63,000 ஏக்கர் பாசனப்பரப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் புகார் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் 63,000 ஏக்கர் பாசனப்பரப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் புகார் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் (பொ) ச. சூர்யபிரகாஷ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநர் அல்தாப், கூட்டுறவு இணைப் பதிவாளர் சொ. சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கு.பா. ஜெயந்தி விவசாயிகள் கடந்த மாதம் அளித்த கோரிக்கை மனுக்களுக்கான பதில்களை வாசித்தார். தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம்:
 விவசாயி கே. சந்திரசேகர்: கரூர் மாவட்டத்தில் குளித்தலை, மண்மங்கலம் உள்ளிட்ட 6 வட்டங்களில் 6 இடங்களில் கால்நடை உலர் தீவன கிடங்கு அமைத்து தீவனம் விற்பனை செய்யப்படுகிறது. மண்மங்கலம் வட்டத்திற்கு வட்டத்தின் மையப்பகுதியில் உலர் தீவன கிடங்கு அமைக்கப்படாததால் தீவனம் வாங்கும் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுவதால் மண்மங்கலம் வட்டத்தின் மையப்பகுதியில் கிடங்கு அமைக்க வேண்டும்.
ஆட்சியர் (பொ) ச. சூர்யபிரகாஷ்: குறிப்பிட்ட 6 இடங்களில் மட்டும் வழங்காமல் விவசாயிகளின் தேவையை பொறுத்து ஒரு வட்டத்தில் தேவையுள்ள மாற்று இடங்களில் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி கவுண்டம்பட்டி ஆர். சுப்ரமணியம்: கரூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் 63,000 ஏக்கர் பாசனப்பரப்பு பாதிக்கப்படுகிறது.
ஆட்சியர்: பாசன வாய்க்கால்களை தூர்வார அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயி மு. முருகேசன்: டிஎன்பிஎல் நிறுவனம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பாசனத்திற்கு வழங்கி வந்தது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுவதில்லை. இதனால் 1,500 ஏக்கரில் உள்ள தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வறட்சி நிவாரணம் பெற்றுத் தரவேண்டும்.
டிஎன்பிஎல் அதிகாரி: காகித ஆலை கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றில் நீர் வரத்தின்றி இயந்திரங்கள் இயக்கப்படாததால் கழிவுநீரேற்றம் குறைந்துவிட்டது.
இதனால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க இயலவில்லை. வறட்சி நிவாரணம் வழங்க வாய்ப்பில்லை.
விவசாயி கந்தசாமி: வறட்சி நிவாரணம் வழங்கியவர்கள் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தும் இன்னும் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படவில்லை. கடந்த மாதம் அடித்த திடீர் காற்றில் மாட்டுக் கொட்டகை சரிந்து ஒரு கறவை மாடு இறந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்தும் அவர் பார்வையிட வரவில்லை.
ஆட்சியர் (பொ) ச. சூர்யபிரகாஷ்: உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை போனில் தொடர்பு கொண்டு மாட்டு கொட்டகையை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேல், விவசாயிகள் கோபாலதேசிகன், மகாதானபுரம் ராஜாராம், கே.ஆர். ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com