பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் போராட்டம்

கரூரில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை முழுவதுமாக புறக்கணித்து ஆசிரியர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கரூரில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை முழுவதுமாக புறக்கணித்து ஆசிரியர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
   தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்,  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 11ஆம் தேதி முதல் விடைத்தாள்களை 50 சதவீதம் மட்டும் திருத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில சங்க நிர்வாகிகள் எடுத்த முடிவின்படி கடந்த 11 ஆம் தேதி முதல் 50% விடைத்தாள்களை மட்டும் திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 350 பேர் சென்றனர். அப்போது கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் விடைத்தாள்களை முழுமையாக திருத்தினால் மட்டும், நீங்கள் திருத்தலாம், இல்லையேல் உங்களுக்கு விடைத்தாள்கள் திருத்த வழங்கப்படாது என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் பணியை முழுவதுமாக புறக்கணிப்பு செய்து அறையை விட்டு வெளியேறினர்.
இதையடுத்து பகல் முழுவதும் விடைத்தாள்களை திருத்தாமல் ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  மாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர்கள் மாநில சங்கம் முடிவெடுத்ததன்படி எங்களால் 50 சதவீத விடைத்தாள்களை மட்டுமே திருத்த முடியும் என உறுதிபடக்கூறினர். ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தினால் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் மே 16 ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com