குழந்தைக்கு எச்.ஐ.வி. வராமல் தடுப்பதில் கரூர் முதலிடம்

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவாமல் 97.9 விழுக்காடு தடுத்து இந்திய அளவில் கரூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவாமல் 97.9 விழுக்காடு தடுத்து இந்திய அளவில் கரூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
எய்ட்ஸ் என்பது தொற்று நோயல்ல,  எய்ட்ஸ் நோயாளிகளை யாரும் ஒதுக்க வேண்டாம். அவர்களுடன் அன்புடன் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்   தொடக்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எச்.ஐ.வி.  குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் சிறப்பாக மாவட்டம் முழுவதும் ஈடுபட்ட 71 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி மேலும் அவர் பேசியது:
எச்.ஐ.வி. என்பது தொற்று நோயல்ல. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை யாரும் ஒதுக்கக்கூடாது. அவர்களிடம் அன்புடன் பழக வேண்டும். எச்.ஐ.வி. நோய் வரமால் தடுப்பது நம் ஒவ்வொருவரின் சுய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய உயிர்காக்கும் சிகிச்சையை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. 
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு அந்த நோய் வராமல் தடுக்க பிரசவத்தின்போதும், குழந்தை பிறந்த பின்னும் மேற்கொள்ளப்படும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு, தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவாமல் 97.9 விழுக்காடு மக்களுக்கு தடுத்ததில் இந்திய அளவில் கரூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இந்த களப்பணியில் மிகுந்த அர்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து அலுவலர்களையும் பாராட்டுகிறேன்.
அனைவரும் உங்களுடைய எச்.ஜ.வி. நிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் எச்.ஐ.வி. உள்ளவர்களைக் கண்டறிய 780 நம்பிக்கை மையங்கள், 55 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் மற்றும் 174 துணை கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன.  கரூர் மாவட்டத்தில் உள்ளள 16 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் வாயிலாக இலவச எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களில் ஏப்.2017 முதல் மார்ச் 2018 வரை 7,293 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுக்கு எச்.ஐ.வி. இல்லாத குழந்தைகள் பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 30,270 ஆண்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 98 நபர்களுக்கும், 29,963 பெண்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 81 பெண்கள் மற்றும் 12 திருநங்கைகளுக்கும் எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்ட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்கின்றனர். எச்.ஐ.வி. தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடத்திலும், இளைய தலைமுறையினரிடத்திலும் ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்டத்தில் 23 செஞ்சுருள் சங்கங்கள் பல்வேறு கல்லூரிகளில் தொடங்கப்பட்டு தற்போது சுமார் 5,200 மாணவ-மாணவிகள் இதில் தன்னார்வ உறுப்பினர்களாக உள்ளனர். எனவே, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல், புறக்கணிக்காமல் நம்மில் ஒருவராக கருதி அவர்களுடன் அன்புடன் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவரிடத்திலும் ஏற்படவேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமபந்தி விருந்தில் அனைவருடனும் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவருந்தினார். 
நிகழச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் மருத்துவர் விஜயகுமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் சுமதி மற்றும் எச்.ஐ.வி.உள்ளோர் கூட்டமைப்பைச் சார்ந்தோர், தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கிய பேரணி, திண்டுக்கல் சாலை வழியாக அரசு கலைக் கல்லூரியை அடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு  வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com