ஆன்லைன் பத்திரப் பதிவு ரத்து கோரி ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் முறையை ரத்து செய்யக்கோரி கரூரில் பத்திர எழுத்தர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் முறையை ரத்து செய்யக்கோரி கரூரில் பத்திர எழுத்தர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு கடந்த 13-ம் தேதி முதல் பத்திரப்பதிவு முறையை ஆன்லைன் முறைக்கு மாற்றியது. இந்த புதிய முறையால் பத்திரப்பதிவுக்கு காலதாமதம் ஆகிறது என்றும், இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் கூறி பத்திரப்பதிவு எழுத்தர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 
கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பத்திரப்பதிவு எழுத்தர்கள் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், நங்கவரம் உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம் முன் கரூர் மாவட்ட பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி. சஞ்சீவி தலைமை வகித்தார். செயலர் ஏ. சைமன், பொருளாளர் கே. சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிலம் வாங்குவோர் மற்றும் விற்போர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தினர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து செயலர் ஏ. சைமன் கூறுகையில், ஏற்கனவே ஆப்லைன் மூலம் பத்திரப்பதியும்போது ஒரு பத்திரம் ஒரு மணி நேரத்தில் பதிவு செய்யப்படும். 
ஆனால் தற்போதைய ஆன்லைன் முறையால் ஒரு பத்திரம் பதிவு செய்ய 48 மணி நேரம் முதல் 78 மணி நேரம் வரை ஆகிறது. வில்லங்கம், நகல் ஏற்கெனவே ஓரிரு நாட்களில் கிடைக்கும். தற்போதைய ஆன்லைன் முறையில் ஒருவாரம் ஆகிறது. 
இதனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தபோது நீதிமன்றம் ஆன்லைன் மூலமும், ஆப்லைன் மூலமும் பத்திரப்பதிவு செய்ய வேண்டும். 
ஆப்லைன் மூலம் பதியவரும் பத்திரங்களை மறுக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. 
இவற்றை பரிசீலித்த பதிவுத்துறைத் தலைவர் கடந்த 14-ம்தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில் சரிபார்ப்பு முடிக்கப்பட்ட ஆவணங்கள் 10 நிமிடங்களுக்குள் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 
இவை நடைமுறைக்கு வரவில்லை. சர்வர் சரியாக இயங்கவில்லை என காரணம் கூறி பொதுமக்களை அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி, நேரத்தையும் வீணாக்கி பண விரயத்தையும் உண்டாக்குகிறார்கள். 
ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை கைவிட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கான சிரமங்கள் குறையும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com