"முதியோர் இல்லம் அதிகளவில் உருவாகுவது சமுதாயத்துக்கு கேடு'

முதியோர் இல்லம் அதிகளவில் உருவாகுவது சமுதாயத்திற்கு ஆரோக்கியமான செயல் இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.

முதியோர் இல்லம் அதிகளவில் உருவாகுவது சமுதாயத்திற்கு ஆரோக்கியமான செயல் இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினவிழாவில் முதியோர் பராமரிப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பேசியது: மூத்த குடிமக்கள் நமது நாட்டின் சொத்து. 
அவர்களை பேணி பாதுகாப்பது நமது கடமையாகும்.  மூத்த குடிமக்களின் அனுபவங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு தேவைப்படுகிறது. வீட்டில் பெரியோர் இருந்தால் அந்த வீட்டில் உள்ள பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கண்டுவிடுவார்கள்.  மேலும், வீட்டில் பெரியோர்கள் இருக்கும்போது இளைஞர்களின் ஒழுக்கம் காக்கப்படுகிறது.  நம்மை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோர்களை நன்றி உணர்வோடு பாதுகாக்க வேண்டும்.  பெற்றோர்கள் இருக்கும் போது மதித்து பாதுகாக்காமல், அவர்கள் இறந்த பின்பு புகைப்படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவதில் எந்த ஒரு புண்ணியமும் இல்லை.
முதியோர் இல்லம் அதிகளவில் உருவாகுவது சமுதாயத்திற்கு ஆரோக்கியமான செயல் அல்ல.  மூத்த குடிமக்களை பிள்ளைகள் கைவிட்டு விட்டால் நடவடிக்கை எடுக்க மூத்த குடிமக்கள் பாதுகாப்பு உரிமை சட்டம் உள்ளது.  தேவைப்படுவோர் அதை பயன்படுத்திக் கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்யத் தயாராக உள்ளது. வயோதிக காலத்தில் உடலில் வலிமை குறையும்.  குழந்தைகள் கைவிட்டு விட்டால் மனவலிமையும் குறைந்து விடும்.  முதியோர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.  தாய், தந்தைகளை பாதுகாக்க வேண்டும்.  முதுமை என்பது ஒரு பருவம்.  அது நோயல்ல.  ஒரு நாள் நமக்கும் அது வரும் என்பதை உணர வேண்டும்.  பேருந்துகளில் இடமளிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின பேரணியை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட  வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஷ்,  மாவட்ட சமூக நல அலுவலர் வள்ளியம்மை, வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com