அமராவதி அணை திறக்க வாய்ப்பில்லை: கடைமடைப் பகுதி விவசாயிகள் வேதனை

அமராவதி ஆற்றில் நிகழாண்டில் கடைமடைப் பகுதி பானத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறிய பதிலால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

அமராவதி ஆற்றில் நிகழாண்டில் கடைமடைப் பகுதி பானத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறிய பதிலால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
கரூர், திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்தும் அமராவதி ஆறு காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாக உள்ளது. இதன் மூலம் பழைய ஆயக்கட்டுப்பாசன பகுதிகள் என்றழைக்கப்படும் கரூர் மாவட்டத்தில் சுமார் 35,000 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு என்றழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 30,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 
திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் அமராவதி ஆற்றின் குறுக்கே 1957-இல் அப்போதைய தமிழக முதல்வர் அணையைக் கட்டினார். அணை கட்டப்படும்போதே கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட பின்புதான் புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது ஒப்பந்தத்தை மீறி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உத்தரவின்பேரில் புதிய ஆயக்கட்டுப்பகுதியான ஏஎம்சிக்கு அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுவதால் கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை என கரூர் மாவட்ட விவசாயிகள் புகார் கூறுகிறார்கள். 
இந்நிலையில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை நன்கு பெய்துவந்த நிலையில் அணை நீர் மட்டம் மொத்த கொள்ளளவான 90 அடிக்கு 67 அடியை தொட்டதால் கரூர் மாவட்டத்திற்கு குடிநீருக்காக கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்நீர் கரூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதி வரை செல்லவில்லை. இதேபோல், நிகழாண்டில் ஜூன் 1 ஆம் தேதி அமராவதி அணை திறக்கப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக அமராவதி ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட பொது பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: அமராவதி அணையில் 70 அடிக்கு மேல் இருந்தால்தான் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். தற்போதைய நிலவரப்படி 49 அடிதான் உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 418 கன அடியாக உள்ளது. இந்த தண்ணீரால் அணை நிரம்ப வாய்ப்பில்லை.  எனவே நிகழாண்டிலும் அணையின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட நிலத்தடி நீர் மட்டம் மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் ராமசாமி கூறியது:  அணையையொட்டி மானாவாரி நிலங்களாக இருந்த ஏஎம்சி வாய்க்கால் பகுதிகள் இன்று முப்போகம் விளைகின்றன. காரணம் அங்குள்ள அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தான். ஆனால் முப்போகம் விளைந்த கரூர் மாவட்டம் இன்று மானாவாரி நிலங்களாக மாறி வருகின்றன. 
கால்நடைகளுக்குக்கூட குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் உபயோகத்திற்காக கடந்த 13 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்தனர். அந்த தண்ணீர் புலியூர் பகுதி வரை மட்டுமே எட்டியது.  கடைமடை பகுதிக்குச் செல்லவில்லை. அணையில் 45 அடி இருந்தாலே கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் திறக்கலாம். ஏதாவது காரணம் காட்டி தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள். விரைவில் தண்ணீர் திறக்காவிட்டால் கரூர் மாவட்ட அமராவதி விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com