ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை


தீபாவளிப் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
கரூரில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த கரூர் மாவட்ட அமமுக பேரவையின் தோட்டம் முஷிபுர் ரஹ்மான் தலைமையில், முபாரக் அலி, அபுதாஹிர், ஆசிக் இலாஹி, சேட், ஷேக் பரித் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்ற பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
தமிழகம் முழுவதும் 22, 000 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் எங்கேயும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஏதேனும் புகார் இருந்தால் சொல்லுங்கள். உடனே நடவடிக்கை எடுக்கிறோம். தீபாவளிப் பண்டிகை அன்று ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரெட் பஸ் என புக்கிங் செய்பவர்களை நாங்கள் இணைய தளம் மூலம் கண்காணித்து வருகிறோம். அவர்கள் கூடுதலாக பயணிகளிடம் வசூலித்தால், கூடுதலாக வசூலித்த பணத்தை திருப்பிக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கும் தாராளமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்து அதிகாரிகள், போலீஸார், தொழிற்சங்கத்தினர் ஆகியோர் கொண்ட குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், பொருளாளர் கண்ணதாசன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், தொழிற்சங்கச் செயலாளர் பொரணிகணேசன், முன்னாள் மாணவரணி செயலாளர் தானேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com